டெல்லி: நீண்ட நாட்களுக்குப் பிறகு மத்தியில் ஆளும் பாஜக தரப்பில் இருந்து ஒரு தலைவர் வெளிப்படையாக வந்து, இந்திய ஆட்டோமொபைல் துறை மந்த நிலையில் தான் இருக்கிறது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அவர் நம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
வெகு நாட்கள் வரை இந்தியப் பொருளாதார மந்த நிலை குறித்து பல தரப்பினரும் தொண்டை தண்ணீர் வற்றிப் போகும் அளவுக்கு கத்தியும் பாஜக அரசு அதை எல்லாம் கேட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அவ்வளவு ஏன் நிதி அமைச்சகமே கூட சமீபத்தில் தான் இந்தியப் பொருளாதாரம் ஒரு மந்த நிலையில் இருப்பதை ஒப்புக் கொண்டது. இதை எல்லாம் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசினார் நிதின் கட்கரி. அதில் "இப்போது இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலவிக் கொண்டு இருக்கும் மந்த நிலைக்கு உலக பொருளாதாரம் தான் காரணம். அதோடு வாகனங்களுக்கு போதுமான தேவை இல்லாததும் காரணம். மத்திய அரசு இந்திய ஆட்டோமொபைல் துறை உடன் இருக்கிறது" எனவும் தைரியம் சொல்லி இருக்கிறார்.
அதோடு கம்பஸ்டன் இன்ஜின்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் இப்போது தடை விதிக்கப் போவதில்லை எனவும் சொல்லி கொஞ்சம் உற்சாகப்படுத்தி இருக்கிறார். அதோடு இந்திய ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைப்பது, ஏற்றுமதிகளை ஊக்குவிப்பது என பல விஷயங்களைச் செய்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.
இந்தியாவில் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இதனால் சுற்றுச் சூழல் மாசுபாடு அதிகமாகிறது. எனவே தான் மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களை ஊக்குவிக்கிறோம். நாங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கவில்லை எனவும் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதோடு இந்தியாவில் முழுமையாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கும் ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அரசுத் துறைகள் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது எனச் சொல்லப்பட்டு இருந்த தடையை சமீபத்தில் தான் நிதி அமைச்சகம் நீக்கி இந்திய ஆட்டோமொபைல் துறையின் தேவையை அதிகரிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications