டெல்லி: உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை படு கொடூரமாக இருக்கிறது. இதனால் உலக அளவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை கூட ஒவ்வொரு மாதமும் சரிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உலக நாடுகளுக்கு மாறாக விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
கடந்த ஜூலை 2018-ல் இந்தியாவில் உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையை விட 8.9 % பேர் கூடுதலாக இந்த ஜூலை 2019-ல் விமான சேவைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்களாம். இதை நம் அரசியல்வாதிகள் சொல்லவில்லை. சர்வதேச விமான போக்குவரத்துச் சங்கம் IATA - International Air Transport Association சொல்லி இருக்கிறது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததுடன் மட்டும் நிற்கவில்லை. விமான துறையில் முக்கியமான தரவுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் ஆர்பிகே எனச் சொல்லப்படுகின்ற RPK - Revenue Passenger Kilometer-ம் அதிகரித்து இருக்கிறதாம். அது என்ன RPK - Revenue Passenger Kilometer எனக் கேட்கிறீர்களா..?
ஒரு விமானத்தில் 100 பயணிகள் பயணிக்கிறார்கள். அந்த விமானம் 545 கிலோமீட்டர் பயணிக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆக இப்போது மொத்த பயணிகளை, பயணிக்கும் மொத்த தூரத்துடன் பெருக்கினால் வருவது தான் இந்த RPK - Revenue Passenger Kilometer. இந்த உதாரணத்துக்கு RPK - Revenue Passenger Kilometer 54,500 கிலோமீட்டர் தான் விடை.
இந்த RPK - Revenue Passenger Kilometer கணக்கும் இந்திய விமான சேவைகளில் ஜூலை 2019-ல் 8.9 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். கடந்த ஜூன் 2019-ல் இந்த RPK - Revenue Passenger Kilometer 8.2 சதவிகிதமாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இந்த தரவுகளை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டாலும், சர்வதேச அரங்கில், இந்தியா எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். இந்தியாவில் கடந்த 4 - 5 ஆண்டுகளாக பயணிகள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் அதிகரித்துக் கொண்டே வந்ததாம். ஆனால் இப்போது ஒற்றை இலக்கத்தில் தான் வளர்ச்சி கண்டு வருகிறது என வருத்தப்படுகிறார்கள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தினர்கள்.
இந்தியாவின் விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் எனச் சர்வதேச விமான போக்குவரத்து சங்கமே சொல்கிறது.


Click it and Unblock the Notifications