மும்பை: மோடியின் இரண்டாவது பதவிக் காலம் அதிகாரபூர்வமாக கடந்த மே 30, 2019 அன்று தொடங்கியது. ஆனால் இன்று வரை பொருளாதாரத்தின் பழைய வளர்ச்சி தொடங்கவில்லை. தினம் தினம் நம்மை பயமுறுத்தும் புதிய செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
மோடியின் முதல் 100 நாட்கள் கடந்த செப்டம்பர் 06, 2019 உடன் நிறைவு அடைகிறது. ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக இந்த 100 நாட்களில் எத்தனை பேர் எவ்வளவு ரூபாய் நட்டம் கண்டிருக்கிறார்கள் தெரியுமா.?
ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் பல லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். அதுவும் மோடி தலைமையிலான அரசு பொறுப்பில் இருக்கும் போது நடந்து இருக்கிறது.
மோடி 2.0
மே 30, 2019 அன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்த மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு 154.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் 06, 2019 அன்று மும்பை பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் முடியும் போது 140.28 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது. ஆக 100 நாளில் சுமார் 14.15 லட்சம் கோடி ரூபாயை மோடி தலைமையிலான அரசின் முடிவுகளால் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் சந்தையில் இழந்து இருக்கிறார்கள்.
நிர்மலா சீதாராமன்
கடந்த 05 ஜூலை 2019-ல் பட்ஜெட் தாக்கல் செய்த கையோடு சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் விழுந்தது. அடுத்த நாளே மீண்டும் சுமார் 750 புள்ளிகள் சரிந்தது. அதற்குப் பின்னும் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது "நானும் சென்செக்ஸை பின் தொடர்கிறேன். ஆனால் சென்செக்ஸ் புள்ளிகள் என்னை பாதிக்காத வகையில் பின் தொடர்கிறேன்" என நாசூக்காகச் சொல்லி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். விளைவு அடுத்த சில வாரங்களிலேயே சென்செக்ஸ் தன் 37,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு சரிந்தது.
நடவடிக்கைகள்
ஒரு நிதி அமைச்சரே தன்னை சென்செக்ஸ் பாதிக்கக் கூடாது அல்லது பாதிக்காத வகையில் சென்செக்ஸை பின் தொடர்வதாகச் சொன்னது இவராகத் தான் இருக்கும். ஒருவழியாக அரசு தான் செய்த தவறுகளை உணர்ந்தார்களா..? என்று தெரியவில்லை. ஆனால் இந்தியப் பொருளாதாரம் மேம்பட, தன் ஜூலை 05, 2019-ல் அறிவித்த பல விஷயங்களை ஆகஸ்ட் 23, 2019 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பின் வாங்கினார்.
வங்கிகள் இணைப்பு
குறிப்பாக அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை பின் வாங்கினார். ஆட்டோமொபைல் சார்ந்த கொள்கைகளை தெளிவு படுத்தினார். பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதிபடுத்தினார். இதெல்லாம் சந்தை ஓரளவுக்கு பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு போகும் நேரத்தில் வங்கிகள் இணைப்பு என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அடுத்த நாளே சென்செக்ஸ் மீண்டும் சுமார் 750 புள்ளிகள் சரிந்தது. மீண்டும் சந்தையின் குரலை நிர்மலா சீதாராமன் கவனிக்க மறுக்கிறார்.
ராகேஷ் ஜுன் ஜுன் வாலா
"அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்து விட்டது போலத் தெரிகிறது. தற்போது சந்தை நிலவரங்களைப் பார்க்கும் போது, இது பங்குகளை வாங்க சரியான நேரம் என நான் நம்புகிறேன். ஆனால் சந்தை உடனடியாக ஏற்றம் கண்டு நமக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது" என நடு நெற்றியில் அடித்துச் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா.
பொருளாதாரம் மாறும்
மேலும் "ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிட்டு சந்தை செண்டிமெண்ட் மாறுமா எனக் கேட்டால் மாறாது. நாம் நிறைய விஷயங்களை மாற்றினால் தான் சந்தையின் செண்டிமெண்ட் மாறும்" எனவும் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்த விஷயங்களால் இந்தியப் பொருளாதாரத்தின் செண்டிமெண்ட் மாறும் எனவும் அடிக்கோடு போட்டுச் சொல்லி இருக்கிறார். ஆக இத்தனை பெரிய முதலீட்டாளரே சொல்லும் போது சந்தை மீண்டு மேலே எழுந்து வருவது சுலபமான விஷயம் இல்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.


Click it and Unblock the Notifications