ஹைதராபாத் : இந்துக்களின் முதல் கடவுளான விநாயகருக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, இந்தியாவில் பரந்த அளவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஹைதராபாத்தைத் சேர்ந்த பாலாபூர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு, பிரமாண்ட லட்டு ஒன்று நெய்வேதியமாக படைக்கப்பட்டது.

21 கிலோ எடை கொண்ட இந்த லட்டை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில், இந்த லட்டினை அதே ஊரினை சேர்ந்த கோலன் ராம் ரெட்டி என்பவர் இதை 17.6 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.
இதில் வேடிக்கை என்னவெனில் ராம் ரெட்டி இந்த லட்டினை ஏலத்தில் எடுப்பது, இது முதல் முறையோ, இராண்டாவது முறையோ அல்லது. இது ஒன்பதாவது முறை என்றும் கூறப்படுகிறது. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இவர், இந்த நெய்வேதியமாக படைக்கப்பட்ட லட்டினை ஏலத்தில் எடுத்து வருகிறாராம்.
கடந்த 1980 முதல் பாலாபூர் கணேஷ் உற்சவ சமிதி எனப்படும் இந்த கமிட்டி பெரிய பெரிய விநாயகரை வைத்து, விநாயகர் சதுர்த்தியன்று பூஜித்து வருவதும், பின்னர் 1994ம் ஆண்டு முதல் தான் இந்த லட்டுவையும் ஏலத்தில் விடத் தொடங்கியுள்ளனர். இந்த லட்டு ஆரம்ப காலத்தில் முதல் முறையாக வெறும் 450 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த வருடம் இரண்டாவது முறையாக 4,500 ரூபாய்க்கும், இதற்கு அடுத்த வருடம் 18,000 ரூபாய்க்கும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. கடந்த 2002லிருந்தே லட்சக் கணக்கில் ஏலம் போனது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகரின் கையில் இருக்கும் இந்த லட்டுவானது, பாலாபூர் வீதிகள் வழியாக ஊர்வலம் எடுத்து செல்லப்பட்டு, பின்னர் ஏலம் விடப்படும். இதன் பின்னர் அது மக்களுக்கு வழங்கப்படும்,
இம்மாதிரி லட்டுவை ஏலம் விடுவது பாலாபூர் கிராமத்தில் தான் முதன் முதலில் தொடங்கியது என்றும், இவ்வாறு ஏலத்தில் எடுக்கப்படும் லட்டுவை, வயல்களில் தெளித்தால், விவசாயம் விருத்தி அடையும் என்பது இவ்வூரின் ஐதீகம் என்றும் கூறப்படுகிறது.இதனாலேயே இந்த லட்டு மிகச் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications