டெல்லி: பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் புகழ் நீரவ் மோடியின் சகோதரர் நெஹலுக்கு வலை வீசுகிறது இண்டர்போல் அமைப்பு. நீரவ் மோடியின் சகோதரர் நெஹலுக்கு RCN என்று சொல்லப்படும் ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner Notice) கொடுத்து இருக்கிறது இண்டர்போல்.
பஞ்சாப் நேஷனல் பேங்கில் பல பில்லியன் டாலர் மதிப்புக்கு ஊழல் செய்த குற்றத்துக்காக, நெஹலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி இருக்கிறதாம். நெஹல் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாராம். இவர் மீது பணச் சலவை செய்வது மற்றும் ஆதாரங்களை அழிப்பது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு இருக்கிறதாம்.

பஞ்சாப் நேஷனல் பேங்கில் சுமார் 14,000 கோடி ரூபாயை லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங் (LoU - Letter of Undertaking) வழியாக ஊழல் செய்த வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாக நீரவ் மோடியும், அவரின் மாமா மெகுல் சோக்சியுமே இருக்கிறார்கள். இப்போதும் நீரட் மோடியின் வழக்கு லண்டனில் நடந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 2018 காலகட்டங்களில் பஞ்சாப் நேஷனல் பேங்க் தொடர்பான பிரச்னைகள் வெளி உலகத்துக்கு தெரிய வர நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகிய இருவருமே சத்தம் காட்டாமல் இந்தியாவை விட்டு வெவ்வேறு நாடுகளுக்கு ஓடிப் போய்விட்டார்கள். இன்று வரை அவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர, அந்தந்த நாட்டின் அரசுடன் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
நீரவ் மோடி, லண்டன் நகரத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டு இருந்த வீடியோ இணைய தளம் வழியாக பட்டி தொட்டி எல்லாம் டிரெண்டாக, கடந்த மார்ச் 2019-ல் இந்தியாவின் அழுத்தத்தால் கைது செய்து, தென் மேற்கு லண்டனில் இருக்கும் வேண்ட்ஸ்வொர்த் (Wandsworth) சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்சியோ சொகுசாக ஆண்டிகுவா நாட்டில் வாழ்ந்து வருகிறார். உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களால் தன்னால் இந்தியாவுக்கு வர முடியாது என மும்பை உயர் நீதி மன்றத்துக்கே அசால்டாக பதில் சொல்லி விட்டு, அடுத்த வேலை பார்த்துக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications