இந்திய ஆட்டோமொபைல் துறையில் BS6 எமிஷன் கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கார்களை முழுவதுமாக விற்பனை செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
இதனால் பல நிறுவனங்கள் புதிய வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளை நிறுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹூண்டாய், மஹிந்திரா ஆகியவை தயாரிக்கும் பணிகளை முடக்கியுள்ளது.

இதில் டிவிட்டர் ஹீரோ ஆனந்த் மஹிந்திரா தலைமை வகிக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகள் 8 முதல் 14 நாட்கள் வரையில் நிறுத்தப்படும் என அறிவித்த நிலையில் தற்போது இக்காலத்தை நீட்டித்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 14 நாட்களைத் தற்போது 3 நாட்கள் அதிகரித்து 17நாட்களாக அறிவித்துள்ளது. இந்த 3 நாட்கள் நீட்டிப்பு இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வயதான ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் எனப் பல பிரிவினரை குறிவைத்து ஊழியர்களை வெளியேற்றும் படலம் நடந்து வருவதால். மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் இந்த 3 நாட்கள் நீட்டிப்பு இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் சோகத்தைத் தாண்டி பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குச்சந்தைக்குச் சமர்பித்த அறிக்கையில், அரசின் விதி மாற்றத்தால் நிறுவனத்தில் தயாரிப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தப்படும் என ஆகஸ்ட் 9ஆம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 முதல் 14 நாட்கள் காலத்தை 8 முதல் 17 நாட்களாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
உற்பத்தி பிரச்சனைகள் ஒருப்பக்கம் இருந்தாலும் தீபாவளி, தசரா, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி தனது கார்களுக்கு 40,000 முதல் 1,00,000 ரூபாய் வரையிலும், டாடா மோட்டார்ஸ் கிட்டதட்ட 1.5 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் மஹிந்திராவும் கலந்துக்கொள்ள உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மாருதி சுசூகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக மஹிந்திராவும் குறைந்தபட்சம் 50000 ரூபாய் வரையில் தள்ளுபடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications