இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் சோதனை முயற்சியாக, டெல்லி - லக்னோ மற்றும் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு, ரயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
ஆக இந்தியாவில் தனியார் ரயில் என்றால், அது தேஜஷ் ரயிலாகத் தான் இருக்கும்.
இதில் வேடிக்கை என்னவெனில் இந்த தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த ரயில், பயணிகளை கவர்வதற்காக பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
எப்போதிலிருந்து இயக்கம்
தனியாரின் வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த ரயில், அடுத்து வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் இயக்கப்படும் என்றும், அதுவும் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும் வியாழக்கிழமை மட்டும் இயங்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவெனில் இந்த ரயில் கட்டணமானது, விமான கட்டணங்களை விட 50% குறைவு தான் என்றும் ஐ.ஆர்சி.டி.சி கூறியுள்ளது.
என்னென்ன சலுகைகள்
இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், இதற்காக தனியாக பிக்அப், டிராப் வசதிகள் செய்து தரப்படும் என்றும், இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. இது தவிர டெல்லி - லக்னோ தேஜஷ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, தேவைப்படுவோருக்கு வாடகை கார், தங்கும் விடுதி பதிவு செய்து தருதல் போன்ற வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறப்படுகிறது.
இன்சூரன்ஸ் வசதியும் உண்டு
டெல்லி - லக்னோ செல்லும் தேஜஷ் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இலவச இன்சூரன்ஸ் செய்து தரப்படும் என்று கூறும் ஐ.ஆர்.சி.டி.சி, இந்த ரயில் பயணிகளுக்காக லக்னோ சந்திப்பில் ஓய்வு அறை வசதிகளும், புதுடெல்லி ரயில் நிலையத்தில் சிறப்பு அறை வசதிகளும், கோரிக்கையின் பேரில் கூட்டங்கள் நடத்துவதற்கான அறை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேஜஷில் சிறப்பு சலுகை கிடையாது.
இந்த ரயில்களில் சலுகைகள், சிறப்பு உரிமைகள் போன்றவை கிடையாது. குறிப்பாக 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூல் செய்யப்படும். இது தவிர தட்கல் ஒதுக்கீடு வசதியும் கிடையாது.
எனினும் விமானங்களில் வழங்கப்படும் போர்டு சேவை போலவே வழங்கப்படும் என்றும், இங்கு உணவு, ஆர்.ஓ குடிநீர் மற்றும் காபி மெஷின்கள் என அதிரடியான பல சலுகைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கட்டணங்களும் சாதரண நேரங்களில் ஒரு கட்டணமும், பண்டிகை காலங்களில் வெவ்வேறு கட்டணங்களும் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிக்கெட் பதிவு
இந்த ரயிலில் பயணம் செயவதற்கான இந்த டிக்கெட்களை பயணிகள் irctc.co.in என்ற இணைய தளத்தின் மூலம் பதிவும் செய்து கொள்ளலாம் என்றும், அல்லது மொபைல் ஆப்களிலும், அல்லது ரயில்வே முன்பதிவு மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐ,ஆர்.சி.டி.சி நிர்வாகம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications