தமிழுக்கு பெருமை சேர்த்த, நம் ஒளவைப் பாட்டி இயற்றிய கொன்றை வேந்தன் என்கிற நீதி நூலை நம்மில் பலரும் படித்து இருப்போம்.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. எனத் அந்த நூலின் பாக்கள் தொடங்கும். அதில் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்கிற பாவும் வரும்.
அதாவது கடல் கடந்து சென்றாவது, பொருள் ஈட்டி பெருமையோடு வாழ வேண்டும் என... நம் ஒளவைப் பாட்டி விமான வசதிகள் எல்லாம் வராத காலத்திலேயே பாடி இருக்கிறார். உலகம் காலாட் படை வைத்து தாக்கப் பழகிக் கொண்டு இருக்கும் போதே, நாவாய் படை கொண்டு தாக்கியவன் அல்லவா தமிழன்..!
உண்மை
இந்த பாவை இப்போது இந்திய நாடே மெய்ப்பித்து இருக்கிறது. அட ஆமாங்க. உலக அளவில் தங்கள் சொந்த நாட்டை விட்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறி தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள் பட்டியலில் இந்தியர்களுக்குத் தான் முதலிடமாம். இதை இந்திய அரசு அமைப்பினர்கள் சொல்லவில்லை. அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் இருக்கும், Union Nations Department of Economic and Social Affairs என்கிற அமைப்பே ஆதாரங்கள் உடன் சொல்லி இருக்கிறது.
பெரிய நாடு
இப்படி எத்தனை பேர் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா..? சுமார் 17.5 மில்லியன் பேர் (1.75 கோடி பேர்). கடந்த 2015-ம் ஆண்டு காலத்தில் இந்த எண்ணிக்கை 15.9 மில்லியன் (1.59 கோடி) பேராக இருந்ததாம். இப்போது சுமார் 10 சதவிகிதம் இந்தியர்கள் கூடுதலாக வெளிநாட்டுக்குச் சென்று பல்வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மொத்தம்
உலகம் முழுக்க, தங்கள் சொந்த நாட்டை எல்லாம் விட்டு, வேறு ஒரு புதிய நாட்டில் வந்து வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கு எடுத்தால் சுமார் 272 மில்லியன் (27.2 கோடி) பேர் வருகிறார்களாம். கடந்த 2010-ம் ஆண்டில் இருந்த கணக்கை விட 51 மில்லியன் பேர் கூடுதலாக தங்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களாம்.
நம் நாட்டில்
2000-ம் ஆண்டில் மொத்த உலக மக்கள் தொகையில் 2.8 % பேர், தங்கள் சொந்த ஊரை விட்டு, மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களாக இருந்தார்களாம். இப்போது இந்த எண்ணிக்கை 3.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். ஆனால் ஒரு சின்ன வருத்தம். இந்தியா நாட்டில் குடியேறி வாழும் மற்ற நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2015-ல் 52.4 லட்சம் பேராக இருந்தது, தற்போது 51.5 லட்சம் பேராக குறைந்து இருக்கிறதாம். வங்கதேசத்தில் இருந்து தான் இந்தியாவில் அதிக நபர்கள் குடியேறி வாழ்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
டாப் நாடுகள்
உலக அளவில் தங்கள் தாய் நாட்டை விட்டு வேறு நாடுகளில் குடியேறி வாழும் மொத்த 272 மில்லியன் பேரில் (27.2 கோடி) சுமார் 35 சதவிகிதம் பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்களாம். அதிலும் அதிகமாக இடம் பிடித்திருப்பது 5 நாடுகள் தானாம். இந்தியா 17.5 மில்லியன் பேர், மெக்ஸிகோ 12 மில்லியன் பேர், சீனா 11 மில்லியன் பேர், ரஷ்யா 10 மில்லியன் பேர், சிரியா 8 மில்லியன் பேர் என தங்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளில் குடியேறி வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
வாழவிடும் நாடுகள்
உலகிலேயே அதிகமாக வேற்று நாட்டவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பதில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. 2019 கணக்குப் படி 51 மில்லியன் வேற்று நாட்டவர்களுக்கு வாழ்க்கை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதன் பிறகு ஐரோப்பிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்த்தால் 82 மில்லியன் வேற்று நாட்டவர்களுக்கு வாழ்க்கை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்வது.
10.8 கோடி பேர்
அதாவது ஏற்கனவே தன் தாய் நாட்டை விட்டு ஒரு வளரும் நாட்டுக்குச் சென்று கொஞ்சம் காலம் வாழ்ந்து விட்டு, மீண்டும் இன்னொரு நாட்டுக்குச் சென்று புதிதாக வாழ்க்கையைத் தொடங்குபவர்களின் எண்ணிக்கை, மட்டும் சுமார் 10.8 கோடி பேர் எனவும் சொல்கிறது நியூ யார்க் நகரத்தில் இருக்கும் Union Nations Department of Economic and Social Affairs என்கிற அமைப்பு.


Click it and Unblock the Notifications