நாட்டின் முதன்மையான பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அதிகரிக்கத் தொடர்ந்து பல தரப்பட்ட பணிகளைச் செய்து வருகிறார்.
இதன் படி பெட்ரோலியம் டிரஸ்ட் நிர்வாகம் செய்யும் ரிலையன்ஸ் சர்வீசஸ் மற்றும் ஹோல்டிங் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சுமார் 17 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பங்கு அளவுகள் 48.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவன கைப்பற்றல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றதாகப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமர்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜூன் 30ஆம் தேதி நிலவரத்தின் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் கையில் 24.4 சதவீத பங்கு உள்ளதாகவும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிடம் 4.56 சதவீத பங்குகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 7.1 சதவீத பங்குகள் உள்ளதாகத் தெரிகிறது. மீதமுள்ள பங்குகள் பொதுச் சந்தையில் தினசரி வர்த்தகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் சர்வீசஸ் மற்றும் ஹோல்டிங் கைப்பற்றல் முடிந்த நிலையில் ரிலையன்ஸ் ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஹோல்டிங் USA நிறுவனத்தை ரிலையன்ஸ் எனர்ஜி ஜெனரேஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்துடன் இணைத்து அதன் பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனே இணைத்துக்கொள்வதாக அறிவித்தது.
தற்போது ரிலையன்ஸ் உயர்மட்ட நிர்வாகம் இந்தப் பணியில் தான் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படி நிர்வாகப் பிரிவில் ரிலையன்ஸ் பல வேலைகளைச் செய்து வருவது போல வர்த்தகத்திலும் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் தொடர்ந்து புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்து புதிய வர்த்தகத்தை ஈர்த்து வருகிறது. டெலிகாம் நிறுவனத்தில் புதிதாகப் பிராண்ட்பேன்டு சேவை அறிமுகம், ரீடைல் வர்த்தகத்தை மேம்படுத்த அமேசான் உடன் பேச்சுவார்த்தை எனப் பல வழிகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பணியாற்றி வருகிறது.
இதுப்போக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் விற்பனையை அதிகரிக்கச் சவுதி நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான ஆராம்கோ உடனும், பிரிட்டன் எண்ணெய் நிறுவனமான BP உடன் கூட்டணி வைத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவுகளால் இந்நிறுவனப் பங்குகள் அடுத்த 2 வருடத்தில் 100 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தினசரி கவனித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications