எது எடுத்தாலும் பிரச்சனையை மட்டுமே சந்தித்து வரும் அனில் அம்பானிக்கு, தற்போது ஒரு புது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. பிரபல மதிப்பீட்டு நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் தரத்தை BBஇல் இருந்து D தரத்திற்குக் குறைத்துள்ளது.
இந்த தர மதிப்பீட்டால் ஒரு புறம் இந்த நிறுவனத்தின் மதிப்பு குறையும், இதனால் ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருக்கும் இந்த நிறுவனத்திற்கு இது மேலும் பிரச்சனையாய் அமையும் என்றும் கருதப்படுகிறது.
ஏற்கனவே கடன் பிரச்சனையில் போது உதவி செய்த அண்ணன் முகேஷ் அம்பானி இந்த முறையும் உதவி செய்வாரா? 1,29,500 கோடி ரூபாய் கடன் கட்டப்படுமா? அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் நிலை என்ன? என்று பலதரப்பட்ட கேள்விகள் எழுகின்றன.
மலையளவு கடன்
ஒரு புறம் ஏற்கனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் கடன் பிரச்சனையால், புதிய முதலீடுகள் செய்ய முடியாமல், தனது சொத்தையும் விற்க முடியாமல் தவித்து வரும் நிலையில், மறுபுறம் வாங்கியிருக்கும் கடன் தொகையானது, நாளுக்கு நாள் வட்டி அதிகரிப்பால் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே சிறு குன்றாக இருந்த கடன் இன்று வளர்ந்து பெரிய மலையளவு வளர்ந்து நிற்கிறது.
நிறுவனத்தின் மதிப்பை இழக்கும்
ஒரு புறம் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் இந்த மதிப்பீட்டால், சில்லறை முதலீடுகள் வெகுவாக குறையும் என்றும், ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானிக்கு, இது பெரும் பிரச்சனையாகவே உருவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே முதலீட்டாளர்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து வரும் ரிலையன்ஸ் குழுமம், தற்போது கேர் மதிப்பீட்டால், புதிய முதலீடுகள் கிடைப்பது என்பது புளியங்கொம்பாய் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
திவால் ஆன ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
அனில் அம்பானிக்கு சொந்தமான முக்கிய நான்கு நிறுவனங்கள் கடன் பிரச்சனையால் தவித்து வரும் நிலையில், ஏற்கனவே ரிலையன்ஸ் குழுமத்தின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் தனிப்பட்ட கடன் மட்டுமே கடந்த மார்ச் 31ன் படி, 35,600 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் என 40 மேற்பட்டோரிடம் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வளவு தான் கடன்?
இது தவிர ரிலையன்ஸ் நாவல் அன்ட் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் கடனும், இதே ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு 17,800 கோடி ரூபாய் கடனும், அதிகபட்சமாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு 38,900 கோடி ரூபாய் கடனும், இதே ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 30,200 கோடி ரூபாய் கடனும் உள்ளதாகவும், ஆக மொத்தம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தவிர 93,900 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் சேர்த்து, 1,29,500 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
பலத்த அடி வாங்கிய அனில் அம்பானி
இவ்வாறு பல தரப்பட்ட கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம், இப்பொழுது மேலும் இன்னொரு பிரச்சனையை கண்டுள்ளது. கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பிரச்சனையின் போதே அண்ணன் முகேஷ் அம்பானி வந்து கைது செய்யப்படாமல் காப்பாற்றினார், இந்த நிலையில் தற்போது மேலும் மேலும் அதிகரித்து வரும் கடன் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு, இந்த முறையும் முகேஷ் அம்பானி, தம்பியை காப்பாற்ற வருவாரா? கடன் பிரச்சனை தீருமா?


Click it and Unblock the Notifications