டெல்லி : கடன் பட்டும் பட்டினியா என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப அரசு. இத்துணை லட்சம் கோடி கடன்பட்டும், எந்த வித மாற்றம் தெரியாமல் இன்றளவிலும், பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாகவே கூறி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அரசாங்கத்தின் மொத்த கடன் தொகையானது 88.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் அரசுக்கு கடந்த ஆண்டு இதே காலாண்டில் 84.6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கடந்த ஜூன் 2019ல் அரசின் பொதுக் கடன் நிலுவையானது 89.4 சதவிகிதம் என்றும் டிபார்மென்ட் ஆப் எக்னாமிக் அஃபையர்ஸ் (Department of Economic Affairs) தெரிவித்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசு 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேதியிட்ட பத்திரங்களை (dated securities) வெளியிட்டுள்ளது என்றும், இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேதியிட்ட பத்திரங்களை மட்டும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசு வெளியிட்ட புதிய பத்திர வெளியீடுகளின் முதிர்ச்சியின் சராசரியாக 15 வருடம் எனவும், இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 14 வருடங்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதே கடந்த காலாண்டில் பத்திர வெளியீடுகளின் சராசரி லாபம் 7.21 சதவிகிதமாகவும், இது கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 7.47 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் பொருளாதாரத்தினை மேம்படுத்த பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்களை தீட்டி வரும் நிலையில், மறுபுறம் அரசின் கடனும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு புறம் பொருளாதார மந்தம், வேலையின்மை அதிகரிப்பு, வேலையிழப்பு என அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், நாளுக்கு நாள் தனி மனிதரின் கடன் தொகையும் அதிகரித்து வருகிறது.
மேலும் அரசும் கடனிலேயே மிதந்து வருகிறது. இந்த நிலையில் புதிய முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி பெருக்கம் என்பது ஏற்பட்டாலே ஒழிய இப்பிரச்சனைக்கு வழி பிறக்கும் என்றும், அதிலும் இந்த கடன் பத்திரங்கள் வாயிலாக அரசு கடன் திரட்டுவது, அரசுக்கு இன்னும் பிரச்சனையை தான் அதிகரிக்கும் என்றும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.
ஏனெனில் இந்த கடன் பத்திரமானது உள்ளூர் சந்தைகளில் மட்டும் அல்லாது, வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களும் முதலீடு செய்வார்கள். இது இந்தியாவுக்கு அதிகளவு முதலீட்டை ஈர்க்கும். ஆனால், இந்தியாவில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி இல்லை என்று தெரியவரும் பட்சத்தில், முதலீட்டாளர்காள் முதலீட்டை திரும்ப கேட்கும்போது, இது மிகப்பெரிய பிரச்சனையாகவே மாறும் என்றும் ரகுராம் ராஜன் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.


Click it and Unblock the Notifications