கடந்த செப்டம்பர் 29, 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர வேண்டிய இண்டிகோ நிறுவனத்தின் விமானம் பாதி வழியில் மீண்டும் கோவா விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. நேற்று 180 பயணிகளுடன் கிளம்பிய கோவா - டெல்லி இண்டிகோ விமானம் பறக்கத் தொடங்கி சுமார் 20 நிமிடங்களில், விமானத்தின் இடது இன்ஜினில் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக தீ பிடித்து எரியத் தொடங்கி இருக்கிறது. விமான இன்ஜினில் இருந்து வெளி வந்த புகையை பயணிகளாலும் பார்க்க முடிந்து இருக்கிறது.
புகை மற்றும் நெருப்பைப் பார்த்த பயணிகள் பயத்திலும், பதட்டத்திலும் அலறத் தொடங்கிவிட்டார்கள். உடனடியாக விமானிகள், விமானத்தின் இடது இன்ஜின்களை அணைத்துவிட்டு, ஒரே இன்ஜினில் விமானத்தை பக்காவாகத் தரை இறக்கி இருக்கிறார்கள். இந்த விமானத்தில் தான் கோவா மாநிலத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கப்ராலும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள், விமானிகள் என யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் வெளியாகவில்லை. பயணிகள் பாதுகாப்பாக கோவா விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டு, உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்களாம்.
ஞாயிற்றுக்கிழமை இப்படி ஒரு அவசர காரணம் சொல்லி இண்டிகோ விமானம் தரை இறக்கப்பட்டு இருக்கிறது. இதில் என்ன பெரிய விஷயம் என்றால், இதே போல கடந்த செப்டம்பர் 27, 2019 வெள்ளிக்கிழமை அன்றும், மும்பையில் ஒரு இண்டிகோ விமானம் இதே போல அவசர காரணம் சொல்லி தரை இறக்கப்பட்டு இருக்கிறதாம்.
இப்படி ஷேர் ஆட்டோ கணக்காக அடிக்கடி அவசர காரணம் சொல்லி தரை இறக்குவதால் இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் விலையும் கொஞ்சம் ஆட்டம் காணத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் தான் இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் விலை தன் வாழ்நாள் உச்சமான 1,882 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இப்படி தொடர்ந்து லேண்டிங் பிரச்னை எழுந்து கொண்டிருந்ததால், விலை ஏற்றம் கை விடப் பட்டு, இன்று விலை இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவன பங்குகளின் விலை சுமார் 0.75 சதவிகிதம் விலை இறக்கம் கண்டு 1,838 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications