டெல்லி : இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அவுட்கோயிங் கால்களுக்கான ரிங்கிங் நேரம் 45 நொடிகளாகும். ஆனால் ஜியோ நிறுவனமே இதையும் மீறி தனது ரிங்கிங் நேரத்தை 20 நொடிகளாக குறைத்தது. இந்த நிலையில் இதை பற்றி தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் ஏர்டெல் நிறுவனம் கூறி இருந்தது.
மேலும் ஜியோ நிறுவனம் தனது ரிங் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மற்ற நிறுவனங்கள் மாற்ற வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே ஜியோ நிறுவனம் தனது ரிங் நேரத்தை 25 நொடிகளாக மாற்றியது.
இந்த நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரிங் நேரத்தினை 25 நொடிகளாக மாற்றியுள்ளது.
ஜியோவின் தந்திரம்
பொதுவாக ஏர்டெல் அல்லது வோடபோன் நெட்வொர்கில் இருந்து ஒருவர் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தால், அது அவருக்கும் வெறும் 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்த குறைவான நேரத்தினால் 30% கால்கள் வேண்டுமென மிஸ்டுகால் ஆக மாறியதாக கூறப்பட்டது. இதை பார்த்த பின்பு ஜியோ வாடிக்கையாளர், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கோ அல்லது வோடபோன் வாடிக்கையாளருக்கோ கால் செய்வார். இந்த செயல் மூலம் ஏர்டெல், வோடபோன் நிறுவனத்திற்கு ஒரு அவுட்கோயிங் அழைப்பு, இன்கம்மிங் அழைப்பாக மாறும் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
மிஸ்டுகாலில் வருமானம் பார்த்த ஜியோ
இதில் தொலைத் தொடர்பு விதிகளின் படி, மிஸ்டுகால் பெறும் நிறுவனமானது, இன்கம்மிங் அழைப்பு பெறும் எதிர் நிறுவனத்திற்கு ஐயுசி(IUC) கட்டணமாக 6 பைசா செலுத்த வேண்டும். ஜியோவின் இந்த காலக்கெடு குறைப்பால் மற்ற நிறுவனங்களுக்கு வரவேண்டிய இன் கமிங்க் கால்கள் செயற்கையாகவே மிஸ்டு காலாக மாற்றபடுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோவில் பதிவாகும் கால்களில் சுமார் 30% மிஸ்டு கால்களாக மாற்றப்படுவதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் ஜியோ நிறுவனம் கணிசமான லாபம் பார்த்துள்ளது என்றும் ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியது.
ஜியோவுக்கு பதிலடி
பல நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொலை தொடர்பு ஆணையமான டிராயும், ஜியோவுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் படி ஜியோ நிறுவனம் தனது ரிங் நேரத்தை கடந்த வாரம் 20 நொடியிலிருந்து, 25 நொடிகளாக அதிகரித்தது. ஆனாலும் இந்த நடவடிக்கை பிற நிறுவனங்களுக்கு திருப்தியளிக்காத நிலையில், தாங்களும் ரிங்கிங் நேரத்தை குறைக்க நேரிடும் என எச்சரித்திருந்தன. இந்த நிலையிலேயே ஏர்டெல் நிறுவனம் தனது ரிங் நேரத்தினை குறைத்துள்ளது.
என்ன செய்ய போகின்றன மற்ற நிறுவனங்கள்
இதன்படி ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் நேரத்தை 25 நொடிகளாக குறைத்துள்ளது. இந்த நிலையில் வோடபோன் மற்றும் பி.எஸ்.என்,எல் நிறுவனங்களும் இந்த விகிதத்தினை குறைக்குமா? இதற்கு டிராய் என்ன சொல்லப் போகிறது. ஜியோ கூறியது போல சர்வதேச அளவில் ஸ்டாண்டர்டு நேரத்தை இப்படியே இருக்க விட்டு விடுமா? இல்லை மற்ற நிறுவனங்களும் இந்த நேரத்தை மாற்றிவிடுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications