டெல்லி: 18-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களால் இந்தியா இரண்டு நூற்றாண்டுகளாக அவமானப்பட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்தியவர்கள் இந்தியாவில் இருந்து சுரண்டிச் சென்ற சொத்துக்களின் மதிப்பு சுமாராக 45 ட்ரில்லியன் டாலர் (45 லட்சம் கோடி டாலர்) இருக்கும் என ஒரு பொருளாதார ஆய்வு அறிக்கை சொல்வதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய வெளி உறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கர்.
இந்த பேச்சை அமெரிக்காவின் வாசிங்டன் டிசியில் அட்லாண்டிக் கவுன்சிலில் (Atlantic Council) பேசி இருக்கிறார் மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் சுப்ரமணியம். அதோடு உலகில் தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகள், புதிய அரசியல் சக்திகளாகவும் மற்றும் பொருளாதார சக்திகளாகவும் உருவாகி வருகிறது. இதை மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் உலகின் டாப் 7 நாடுகள் மட்டும் கூட்டம் போட்டுப் பேசும் ஜி 7 மாநாட்டை விட உலகின் டாப் 20 நாடுகள் கூடிப் பேசிய ஜி 20 மாநாடு அதிக கவனம் ஈர்த்ததைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

நம் சுப்ரமணியம் ஜெய்சங்கர், கடந்த 1977-ம் ஆண்டு இந்திய வெளி உறவுத் துறை சேவையில் பணியாற்றத் தொடங்கி படிப் படியாக வளர்ந்தவர். 2014 - 15 காலகட்டத்தில் அமெரிக்க நாட்டுக்கான இந்திய தூதராக பதவி ஏற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்கு முன்பே சீன நாட்டுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம்.
பல முக்கிய நாடுகளுக்கு இந்தியாவின் தூதராக பணியாற்றிய பின், கடைசியாக இந்தியாவின் வெளி உறவுத் துறைச் செயலராக பணியில் அமர்த்தப்பட்டார். கடந்த ஜனவரி 2018-ல் தான் இந்திய வெளி உறவுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ரார். ஓய்வுக்குப் பின் மனிதர் டாடா குழுமத்தின் உலக கார்ப்பரேட் விவகாரத் துறையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யார் கண் பட்ட அதிர்ஷ்டமோ தெரியவில்லை, திடீரென 2019-ம் ஆண்டு மோடி 2.0 அமைச்சரவையில் மிக முக்கிய பதவியில் ஒன்றான மத்திய வெளி உறவுத் துறை அமைச்சகத்தைக் கொடுத்தார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முன்னாள் வெளி உறவுத் துறைச் செயலராக பணியாற்றிய ஒருவர், அதே துறையின் அமைச்சராக பணியாற்றுவது இவர் தானாம்.


Click it and Unblock the Notifications