டெல்லி : ஐடி துறையில் மிகப்பெரிய ஜாம்பவான் ஆன டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் (TCS) கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 1.8% அதிகரித்து 8,042 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 7,901 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
இந்த நிறுவனம் லாபத்தில் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்திருந்தாலும், எதிர்பார்த்த இலாபத்தை அடையவில்லை என்றும், இந்திய பங்கு சந்தையில் சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக இன்று 48 ரூபாய் அளவுக்கு சரிந்து 1,956 ரூபாயாக உள்ளது.
எவ்வளவு வருவாய்
நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான இந்த நிறுவனத்தின் வருவாய் ஆனது 5.8 சதவிகிதம் அதிகரித்து, 38,997 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 36,854 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலையான நாணய அடிப்படையில் வருவாய் வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 8.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்
எதிர்பார்த்த லாபம் இல்லாவிட்டலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த நிறுவனம் இலாபத்தில் தான் உள்ளது என்பதையடுத்து, இந்த நிறுவனம் பங்கு தாரர்களுக்கு இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக 5 ரூபாயும், ஈக்விட்டி பங்கிற்கு ஸ்பெஷல் டிவிடெண்ட் 40 ரூபாயும், ஆக மொத்தம் 45 ரூபாய் டிவிடெண்டை அறிவித்துள்ளது இந்த நிறுவனம். இது வரும் அக்டோபர் 24 அன்று பங்குதாரர்களுக்கு செலுத்தப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பணியமர்த்தல்
டி.சி.எஸ் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனம் 14,097 பேரை வேலைக்கு புதியதாக சேர்த்துள்ளதாக கூறியுள்ளது. இது வரை காலாண்டுகளில் பணியமர்த்தியதில், இந்த இரண்டாவது காலாண்டில் தான் அதிகளவில் பணியமர்த்தியதாகவும், இதே ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அதிகப்பட்சமாக 12,000 பேரை வேலைக்கு சேர்த்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 4,50,738 என்றும், இதில் பெண்களின் விகிதம் 36.3 சதவிகிதம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற நாடுகளில் வளர்ச்சி எப்படி
டி.சி.எஸ் நிறுவனம் ஐரோப்பிய வர்த்தகத்தில் 16 சதவிகித வளர்ச்சியும், இதே லண்டனில் 13.3 சதவிகித வளர்ச்சியும், வட அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் முறையே 5.3 மற்றும் 6.5 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வளரும் சந்தைகளான இந்தியாவில் 7.7 சதவிகித வளர்ச்சியும், மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா 7.3 சதவிகிதமாகவும், லத்தீன் அமெரிக்காவில் 7.3 சதவிகிதமாகவும் வளர்ச்சி கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications