உலகமே அடுத்த சில தசாப்தங்களில் ஒட்டு மொத்தமாக இயந்திரமயமாகிவிடும் போலிருக்கிறது. அதற்கான சிறந்த முன்னோட்டமாக செயற்கை நுண்ணறிவு என்கிற Artificial Intelligence களம் இறக்கப்பட்டு இருக்கிறது.
அந்த களத்தில் இப்போது ரிலையன்ஸ் குழுமமும் குதித்து இருப்பது தான் ஹாட் நியூஸ். ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் என்கிற நிறுவனம், இனி ஜியோ ஹப்டிக் டெக்னாலஜிஸ் என்கிற பெயரில் அழைக்கப்படும்.
என்ன திடீரென்று கம்பெனி பெயர் எல்லாம் மாற்றம் என்று யோசிக்கிறீர்களா..? அது தானே செய்தியே..!
ஹப்டிக் வளைப்பு
முகேஷ் அம்பானி தலைமை வகித்து நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனம் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீஸ் லிமிடெட். இந்த ஜியோ நிறுவனம் இப்போது ஹப்டிக் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் என்கிற ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார் சாட் பாட் நிறுவனத்தை சுமார் 700 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கிறதாம்.
அப்படித் தான்
எனவே தான் ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயர் இனி ஜியோ ஹப்டிக் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இனி அப்படித் தான் அழைத்தாக வேண்டும். இந்த ஹப்டிக் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் என்ன எல்லாம் செய்யும் தெரியுமா..? ஏன் இந்த நிறுவனத்துக்கு 700 கோடி ரூபாய் கொடுத்து இவ்வளவு அதிக பங்குகளை வாங்க வேண்டும்..?
ஸ்பெஷலிஸ்ட்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சாட் பாட்களை இயங்க வைப்பதில் தான் இந்த ஹப்டிக் நிறுவனம் ஸ்பெஷலிஸ்ட்கள். இந்த நிறுவனமே ஒரு செயற்கை நுண்ணறிவு சாட் பாட் நிறுவனம் தானாம். எனவே தான் ஹப்டிக் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 87 சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனம் 700 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கிறதாம். மீதமுள்ள 13 சதவிகித பங்குகள் ஹப்டிக் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்டாக் ஆப்ஷன் வழியாக தங்கள் கைகளிலேயே வைத்திருக்கிறார்களாம்.
இந்தியாவில் மிகப் பெரிய
இந்த ஹப்டிக் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வளைத்துப் போட்ட பின் தற்போது இந்தியாவிலேயே மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை (AI Chat Bot) ரிலையன்ஸ் ஜியோ கொண்டு வரப் போகிறார்களாம். இந்த சாட் பாட்டில் வெறுமனே எழுத்துக்கள் மட்டும் இன்றி, வாய்ஸ் சாட்டும் செய்யும் விதத்தில் கொண்டு வரப் போகிறார்களாம். இந்த வாய்ஸ் சாட் இந்தியாவிலுள்ள பல மாநில மொழிகளிலும் கொண்டு வர இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் ஜியோ தரப்பினர்.
200 கோடி வாடிக்கையாளர்கள்
ஆப்டிக் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் உலகின் மிகப் பெரிய கான்வர்சேஷனல் சாட் பாட் தளம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கோக கோலா, கே எஃப் சி, சாம்சங், டாட்டா குழுமம் மகேந்திரா குழுமம் என பல நிறுவன வாடிக்கையாளர்களுடன் இந்த செயற்கை நுண்ணறிவு தளத்தை கொண்டு பேசி இருக்கிறார்களாம். சுமார் 2 பில்லியன் வாடிக்கையாளர்களுடன் பேசி இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications