யார் இந்த NBFC? நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா? ஓர் ஆய்வு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு வங்கிகளில் இருந்து சுமார் 50,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க முடியாத NBFC நிறுவனங்களைத் தான் இப்போது கூடுதல் கடன் கொடுக்கச் சொல்லி இருக்கிறார் அனுராக் தாகூர்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி பிரமூகர்களுக்கும், அமைச்சர் பெரு மக்களுக்கும் தற்போது இந்தியாவின் பொருளாதார மந்த நிலையை சரி செய்வதும், பொருளாதார மந்த நிலையை மையமாக வைத்து வரும் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களை சமாளிப்பதுமே பெரிய வேலையாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த வரிசையில், தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன், மத்திய நிதி இணை அமைச்சரான அனுராக் தாகூரும் களம் இறங்கி இருக்கிறார். நல்ல விஷயம் தான். பொருளாதார மந்த நிலை பற்றிய விமர்சனங்களைச் சமாளிப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த கடன்களை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது மத்திய நிதி அமைச்சகம். அதன் ஒரு பகுதியாகத் தான் NBFC நிறுவனங்களை அதிகமாக கடன் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.

அசோசெம்
 

அசோசெம்

மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர், நேற்று (அக்டோபர் 17, 2019, வியாழன்) அசோசேம் (Associated Chambers of Commerce and Industry - ASSOCHAM) கூட்டத்தில் பேசி இருக்கிறார். அப்போது தான், சர்ச்சைக்கு உள்ளாக இருக்கும் விதத்தில் NBFC நிறுவனங்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் NBFC நிறுவனங்கள், இன்னும் அதிகமாக கடன் கொடுக்க வேண்டும். இப்படி அதிக அளவில் கடன்களைக் கொடுத்தால் தான் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை மாறும் எனச் சொல்லி இருக்கிறார்.

நல்லது தானே

நல்லது தானே

மிக முக்கியமாக இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் NBFC-க்கள் அதிக அளவில் கடன் கொடுத்தால் தான் இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுக்க முடியும் எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு வங்கிகள் நடத்திய வீட்டுக் கடன் மேளா கூட்டங்களில் பல NBFC நிறுவனங்கள் பங்கு பெறவில்லை எனவும் தன் வருத்தம் கலந்த கண்டனத்தை தெரிவித்தார். அதோடு வங்கிகளிடம் இருந்து வாங்கும் பணத்தை NBFC நிறுவனங்கள் கடன்களாகக் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆய்வு

ஆய்வு

நம் நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் கருத்தைப் பார்த்தால் சரியாகச் சொல்வது போலத் தானே தோன்றுகிறது..? உண்மையாகவே NBFC வங்கிகளால் நிதி இணையச்சர் சொல்வது போல கடன் கொடுக்க முடியுமா..? இவர்களால் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா..? அவ்வளவு ஏன் அரசு கொடுத்து உதவி இருக்கும் பணத்தை, ஒழுங்காக கடன் வியாபாரம் பக்கம் திருப்பி விட முடியுமா..? வாருங்கள் ஆய்வைத் தொடங்குவோம்.

NBFC என்றால் என்ன
 

NBFC என்றால் என்ன

இவர்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள். இவர்கள், வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கும் பணத்தை வைத்து தான் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பார்கள். உதாரணமாக வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 12% வட்டிக்கு வாங்கும் பணத்தை வெளியே சந்தையில் நமக்கு 16% வட்டிக்கு கடன் கொடுப்பார்கள். இந்த 16 - 12 = 4% தான் இந்த NBFC நிறுவனத்தின் லாபம்.

NBFC அவ்வளவு முக்கியமா..?

NBFC அவ்வளவு முக்கியமா..?

ஆம், இனி இந்தியாவில் NBFC நிறுவனங்கள் இல்லாமல் இந்திய பொருளாதாரமே இயங்காவது எனும் அளவுக்கு, நாளுக்கு நாள் இந்த NBFC நிறுவனங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்திய அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் கொடுக்க முடியாது என ஒதுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு எல்லாம், இந்த NBFC-க்கள் தான் கடன் கொடுத்து உதவுகிறார்கள். இந்தியாவின் அமைப்பு சார்ந்த (Organised Sector) பொருளாதாரத்தை விட, அமைப்பு சாரா (Unorganised Sector) பொருளாதாரம் தானே பெரிதாக இருக்கிறது. அவர்களுக்கே கடன் இல்லை எறால் பொருளாதாரம் எப்படி இயங்கும்..? சரி NBFC நிறுவன சிக்கல்களுக்குப் போவோம்.

என்ன சிக்கல் 1

என்ன சிக்கல் 1

வாராக் கடன். மோசமான நிர்வாகத்தால் கண்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்து கிட்டதட்ட திவால் ஆகும் நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடுத்துக்காட்டு திவான் ஹவுசிங். DHFL நிறுவனம் எஸ்பிஐ உட்பட அரசு வங்கிகளிடம் மட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, போலி நிறுவனங்களுக்கு 14,300 கோடி ரூபாய் கடன் கொடுத்தது, கறுப்புப் பணமாக பதுக்கி இலங்கையில் ஒரு கிரிக்கெட் டீம் வாங்கியது, வெளிநாடுகளில் பலரின் பெயரில் சொத்துக்களை வாங்கியது, பாஜகவுக்கு போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 19.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது என பல மோசடிகளைச் செய்து இருக்கிறார்கள். ஆனால் ஒழுங்காக கடன் கொடுத்து வியாபாரம் மட்டும் செய்யவில்லை.

மோசடி

மோசடி

அதோடு இன்சைடர் டிரேடிங் (நிறுவன உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த ரகசியங்களை பகிர்ந்து பங்கு விலை ஏற்றத்தில் காசு பார்ப்பது) மூலம் 1,000 கோடி மோசடி செய்தது என வரிசையாக பல பிரச்னைகள் வெளியாயின. விளைவு, சுமார் 670 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த இந்த திவான் ஹவுசிங் நிறுவன பங்குகளின் விலை தற்போது சுமாராக 21 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருகிறது. அதாவது 97 சதவிகிதம் விலை சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

என்ன சிக்கல் 2

என்ன சிக்கல் 2

இந்தியாவில் இருக்கும் NBFC நிறுவனங்கள் அடிப்படையாக ஒரு பெரிய தவறைச் செய்தார்கள். குறுகிய கால கடன்களை வாங்கி நீண்ட கால கடன்களாகத் கொடுத்துவிட்டார்கள். இதனால், NBFC நிறுவனங்களால் பணத்தை ரொட்டேஷன் விட முடியவில்லை. உதாரணமாக ஒரு NBFC நிறுவனம் 1 கோடி ரூபாயை 12 மாதத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகச் சொல்லி ஒரு வங்கியிடம் இருந்து கடன் வாங்குகிறார்கள்.

5 ஆண்டு கடன்

5 ஆண்டு கடன்

NBFC நிறுவனங்கள் வாங்கும் இந்த 1 கோடி ரூபாயை வைத்து, 10 பேருக்கு 5 வருட கடனாகக் கொடுத்துவிட்டார்கள். ஆக 12 மாத முடிவில், NBFC நிறுவனங்கள் கொடுத்த 1 கோடி ரூபாய் கடனில், மிகச் சொற்ப பணம் தான் NBFC நிறுவனத்துக்கு திரும்ப கிடைத்து இருக்கும். ஆக NBFC நிறுவனங்கள் கையில் போதுமான பணம் இல்லை.

பணம் இல்லை

பணம் இல்லை

இதனால் சொன்ன படி, NBFC நிறுவனங்களால் வங்கிக்கு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும். இதனால் NBFC நிறுவனத்தின் பெயர் சந்தையில் கெட்டுவிடும். இது தான் இந்திய சந்தையிலும் NBFC நிறுவனங்களுக்கு நடந்தது. மேற்கொண்டு யாரும் NBFC நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. அப்படி ரிஸ்க் எடுத்து கடன் கொடுக்க முன் வந்தாலும், வழக்கத்தை விட கூடுதல் வட்டிக்கு தான் கடன் கொடுக்க முன் வருகிறார்கள்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

சரி எப்படியோ அதிக வட்டிக்காவது பணம் கிடைக்கிறதே பிறகு என்ன..? என்று கேட்கிறீர்களா. அங்கு தான் பிசினஸ் சிக்கலே இருக்கிறது. முதலில் சொன்னது போல ஒரு NBFC நிறுவனத்துக்கு 12% வட்டிக்கு கடன் கொடுத்தால் அவர்கள் 16%-க்கு சந்தையில் கடன் கொடுப்பார்கள் என்று சொல்லி இருந்தோம். இப்போது அதே உதாரணத்தில் 12%-க்கு பதிலாக 13.5 சதவிகிதத்துக்கு கடன் கொடுத்தால், NBFC நிறுவனங்கள் 13.5 + 4.0 = 17.5%-க்கு தான் கடன் கொடுக்க வேண்டி இருக்கும்.

இவ்வளவு வட்டியா

இவ்வளவு வட்டியா

கணக்கு எல்லாம் சரி தான் 17.5%-க்கு கடன் கொடுத்தால் வாங்க யார் இருக்கிறார்கள். இன்று எஸ்பிஐ சுமார் 8.5 சதவிகிதத்தில் இருந்து வீட்டுக் கடனைக் கொடுக்கிறார்கள். அவ்வளவு குறைந்த வட்டிக்கே, யாரும் கடன் வாங்க முன் வரவில்லை. பிசினஸ் கடன்களையும் சுமார் 10.5% முதல் கொடுக்கிறார்கள். அதையும் வாங்கத் தயாராக இல்லாத போது சுமார் 7% கூடுதல் வட்டிக்கு, NBFC நிறுவனத்திடம் வந்து கடன் வாங்குவார்களா என்ன..?

பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலை

அப்படியே கடன் வாங்கினாலும், திருப்பிச் செலுத்த போதுமான பிசினஸ் வருமானம் வேண்டுமே. தற்போது இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருக்கின்ற போது, எப்படி ஒரு வியாபாரி துணிந்து கடன் வாங்கி தன் வியாபாரத்தை பெருக்குவார். அதே தான் இந்திய சந்தைகளிலும் நடந்து கொண்டு இருக்கிறது. NBFC நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், சந்தையில் யாருக்கும் கட்டுப்படி ஆகவில்லை. அப்படியே ஆனால் வியாபாரம் இல்லாததால் யாரும் வாங்க முன் வரவில்லை.

நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

ஏற்கனவே இந்தியாவில் டீமானிட்டைசேஷன் மற்றும் சரக்கு & சேவை வரி போன்ற அதிரடி நடவடிக்கைகளால், மக்கள் கையில் பணப் புழக்கம் குறைந்து இருக்கிறது. அதோடு, வியாபாரமும் முன்பைப் போல் இல்லாமல் சரிந்து இருப்பதை, இந்தியாவின் நுகர்வு சரிவுக் கணக்குகள் சொல்கின்றன. வெகு ஜன மக்களின் கையிலேயே போதுமான காசு இல்லாததால் இந்திய பொருளாதாரத்தில் தேவையும், நுகர்வும் சரிவைக் கண்டு கொண்டிருக்கின்றன.

தடுமாற்றம்

தடுமாற்றம்

மத்திய ரிசர்வ் வங்கியால், NBFC நிறுவனங்களுக்கு நேரடியாக கடன் கொடுக்க முடியாது. இந்தியாவில் இருக்கு அரசு வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களோ NBFC நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆகையால் NBFC நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவது, பொது கடன் பத்திரங்களை வெளியிடுவது, தங்கள் சொத்துக்களை விற்று பணம் திரட்டுவது என தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

கொடுத்தார்கள்

கொடுத்தார்கள்

கடந்த செப்டம்பர் 2018 முதல் இந்த அக்டோபர் 10, 2019 வரை சுமார் 3.9 லட்சம் கோடி ரூபாய், பூல் அஸேட் வாங்குவதற்கு 1.07 லட்சம்கோடி, 15,455 கோடி என சுமாராக 5.1 லட்சம் கோடி ரூபாயை NBFC வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அரசும், பொதுத் துறை வங்கிகள் உதவி இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். ஆனால் NBFC நிறுவனங்களுக்கு, ஐ எல் எஃப் எஸ் நிறுவனம் மட்டும் கொடுக்க வேண்டிய கடன் 1 லட்சம் கோடி ரூபாய். திவான் ஹவுசிங் சொத்து மோசடி செய்தது சுமார் 13,000 கோடி என எல்லா NBFC நிறுவனங்களும் தங்கள் ரேஞ்சுக்கு தகுந்தாற் போல் பணத்தை இழந்து இருக்கிறார்கள்.

நிறைய கடன்

நிறைய கடன்

இந்த சமயத்தில், அரசு வங்கிகள் கொடுக்கும் பணத்தை வைத்து NBFC நிறுவனங்களின் நிதி நிலையை சரி செய்யவே சுமார் 12 மாத காலம் ஆகும் என அனலிஸ்டுகள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு NBFC நிறுவனங்களின் நிதி நிலை, இந்த வாராக் கடன்களாலும், மோசடிகளாலும் அடி வாங்கி இருக்கிறதாம். இப்படி தங்கள் நிதி நிலையை சரி செய்த பின் தான், கடன் கொடுப்பதைப் பற்றி யோசிக்கவே முடியும் எனவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். இந்த லட்சணத்தில் தான், NBFC நிறுவனங்கள் இன்னும் அதிகமாக கடன் கொடுக்க வேண்டும் என மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர் சொல்லி இருக்கிறார்.

சிரமம் தான்

சிரமம் தான்

மேலே சொன்னது போலத் தான் பல்வேறு NBFC நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். இதை நிதித் துறையில் இருக்கும் ஒரு அமைச்சரே புரிந்து கொள்ளாமல் கூடுதலாக கடன் கொடுக்கச் சொன்னால் அவர்களால் எப்படி கடன் கொடுக்க முடியும்..? NBFC மக்களுக்கு கடன் கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், NBFC நிறுவனங்களுக்கு அரசு இன்னும் கூடுதல் கடன் கொடுத்து உதவட்டும். அதன் பிறகு தான் NBFC நிறுவனங்கள், மக்களுக்கு கடன் கொடுப்பதைப் பற்றி யோசிப்பார்கள்.

திவால் வேண்டாம்

திவால் வேண்டாம்

ஆக முதலில், NBFC நிறுவனங்கள், தங்களை நிலைப்படுத்திக் கொண்டால் தான், அவர்களால் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியும். அதற்குள் கடன் கொடுக்கச் சொன்னால் மீண்டும் அது திவாலை நோக்கித் தானே நகர்த்தும்..? மீண்டும் அப்படி ஒரு நிலை இந்தியாவுக்கு வேண்டாமே..! எனவே NBFC-க்களின் நிதி நிலை சரியாகும் வரை, மத்திய நிதி இணை அமைச்சர் அல்ல, உலக வங்கியே சொன்னாலும், இவர்கள் கடன் கொடுக்க முன் வர மாட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதை அரசு புரிந்து கொண்டால் நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: nbfc
English summary

What is NBFC Do NBFC help to revive our economy now

Union finance minister anuraj thakur said that the NBFC non banking financial companies has to lend more to revive the economy to achieve the 5 trillion economy dream.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X