இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..? அச்சத்தில் ஜியோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாகவே, ரிலையன்ஸ் ஜியோவுக்கும், ஏர்டெல் நிறுவனத்துக்குமான சண்டைகள் நிறைய கண்ணில் படுகின்றன. இந்த சண்டைக்கு என்ன காரணம் என்று கேட்டால் ஐயூசி கட்டணம் என்கிறார்கள். இப்போது இந்த ஐயூசி கட்டணங்களால், மக்கள் பயன்படுத்தும் இலவச வாய்ஸ் கால் சேவைகளுக்குக் கூட கட்டணம் வசூலிக்கும் கலாச்சாரம் வரும் வாய்ப்பு இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தன் கவலையை பதிவு செய்திருக்கிறது.

தற்போது இந்த ஐ யூ சி கட்டணத்தை வைத்துக் கொள்ள வேண்டுமா..? வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகள் வரை வேண்டும்..? வைத்துக் கொள்ளக் கூடாது என்றால் எப்போதில் இருந்து இந்த கட்டணங்கள் நீக்கப்பட வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் என பல நிறுவனங்களும் தங்கள் தரப்பு வாதங்களை டிராய் அமைப்பிடம் பல சந்தர்ப்பங்களில் சமர்பித்து இருக்கிறார்கள்.

 

ஐ யூ சி என்றால் என்ன..? அப்படி என்ன பெரிய சண்டை, இந்த வாத விவாதங்களில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சொல்லி இருப்பது என்ன..? என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஐ யூ சி கட்டணம்

ஐ யூ சி கட்டணம்

உதாரணமாக, ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க்குக்கு ஒருவர் கால் செய்கிறார் என்றால், இப்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தில் அழைப்பைக் கனெக்ட் செய்து கொள்ள, ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் Interconnect Usage Charge என்பார்கள். இது எல்லா நெட்வொர்க்குக்கும் பொருந்தும். இந்த ஐ யூ சி கட்டணம் சமீபத்தில் தான் ஒரு நிமிடத்துக்கு 06 பைசா என குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4ஜிக்கு உண்டா..?

4ஜிக்கு உண்டா..?

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால், 4ஜியின் Volte அழைப்புகளுக்கு இந்த ஐ யூ சி கட்டணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம். இந்த ஐ யூ சி கட்டணம் முழுக்க முழுக்க 2ஜி மற்றும் 3ஜி சேவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும் என லைவ் மிண்ட் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறார்கள். எனவே தான் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களை அதிகமாக வைத்திருக்கும் ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் கதறுகிறார்கள் போல. சரி பிரச்னைக்கு வருவோம்.

ரிங் டைம் பிரச்னை
 

ரிங் டைம் பிரச்னை

இந்த ஐ யூ சி கட்டணச் செலவை கணக்கில் எடுத்துக் கொண்ட ஜியோ நிறுவனம், தன் ஜியோ வாடிக்கையாளர்கள், யாருக்கு கால் செய்தாலும் 20 - 25 நொடிகளுக்கு மட்டுமே ரிங் ஆகும் விதத்தில் ரிங்கிங் நேரத்தைக் குறைத்தார்கள். வழக்கமாக இந்தியாவில் ரிங்கிங் நேரம் 40 - 45 நொடிகளாக இருக்கிறதாம். இப்படி தன் நேரத்தை சுமார் பாதிக்கு பாதியாக குறைத்ததால், ஜியோ வாடிக்கையாளர், வேறு நெட்வொர்க் நபருக்கு அழைக்கும் போதும், விரைவில் அழைப்பு கட் ஆகி விடும். எனவே அந்த வேறு நெட்வொர்க் நபர் தான் மீண்டும் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைப்பார். எனவே ஜியோ வேறு நெட்வொர்க்குக்கு கட்டணம் செலுத்த வேண்டியது போய், மற்ற நெட்வொர்க்குகள், ஜியோவுக்கு ஐ யூ சி கட்டணம் செலுத்தும் நிலை வந்தது.

ஏர்டெல் புகார்

ஏர்டெல் புகார்

இந்த ரிங்கிங் நேரப் பிரச்சனையைக் கண்டு பிடித்த ஏர்டெல் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே, நேரடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பிடம் புகார் கொடுத்தது. இந்த பிரச்னை குறித்து நேற்று (அக்டோபர் 17, 2019, விழாயக்கிழமை) ஒரு திறந்த வெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது டிராய் அமைப்பு. அதில் தான் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ என இருவரும் சட்ட ரீதியாகவும், உலகத் தர ரீதியாகவும், தங்கள் தரப்பு நியாய வாதங்களை முன் வைத்தார்கள்.

ஜியோ எதிர் புகார்

ஜியோ எதிர் புகார்

ஜியோ மீது ஏர்டெல் புகார் கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் ஆகிய மூன்று இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மீது ஜியோ ஒரு அதிரடி புகார் கொடுத்தது. தங்கள் (3 நிறுவனங்கள்) நிறுவனத்தின் பல மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர் சேவை மைய எண்களாகக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த எண்களுக்கு செய்யப்படும் அழைப்புகள் எல்லாம், நேரடியாக பேசப்படாமல் கால் சென்டர்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. எனவே பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் கொடுத்திருக்கும் வாடிக்கையாளர் சேவை எண்கள் எல்லாம் ஒரு வெர்ச்சுவல் எண்களாகத் தான் இருக்கின்றன.

ஜியோவுக்கு நட்டம் என புகார்

ஜியோவுக்கு நட்டம் என புகார்

இப்படி பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் கொடுத்திருக்கும் எண்களுக்கு, ஜியோ வாடிக்கையாளர்கள் கால் செய்தால் கூட, மற்ற நெட்வொர்க்குகளுக்கு, ஜியோவிடம் இருந்து கால் வருகிறது என்கிற கணக்கில், ஜியோ நிறுவனம், ஒரு நிமிடத்துக்கு 6 பைசா ஐ யூ சி கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே ஜியோவிடம் இருந்து, ஐ யூசி கட்டணங்களைப் பறிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் இப்படிச் செய்து இருப்பதாக டிராயிடம் புகார் கொடுத்தது ஜியோ நிறுவனம்.

ஐயூசி யாருக்கு லாபம்

ஐயூசி யாருக்கு லாபம்

இந்த ஐ யூ சி கட்டணத்தால் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா மற்றும் பி எஸ் என் எல் போன்ற மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தான். ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கு, இந்த ஐ யூ சி கட்டணம் வழியாக வரும், சில ஆயிரம் கோடி ரூபாய் வருவாயும் அடி வாங்கினால் அவர்கள் நிறுவனத்தை எப்படி நடத்துவார்கள். சமீபத்தில் கூட ஏர்டெல் நிறுவனம் வரும் 2022 வரையாவது ஐ யூ சி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என டிராயிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். சரி ஏன் ஐயூசி கட்டணத்தை வசூலிக்க இவர்கள் துடிக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஏன் ஜியோ இந்த ஐ யூ சி கட்டணத்தை எதிர்க்கிறது..?

ஜியோ நஷ்டம்

ஜியோ நஷ்டம்

ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை, இந்த ஐயூசி கட்டணங்களாக பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கட்டணமாகச் செலுத்தி இருக்கிறார்கள். தற்போது, இந்த இழப்பை சரி கட்டத் தான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சில வாரங்களுக்கு முன்பு, தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்கிற கட்டனத்தை சரி கட்டும் விதமாக புதிய ஐ யூ சி டாப் அப் வவுச்சர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏர்டெல் தரப்பு வாதம்

ஏர்டெல் தரப்பு வாதம்

சொன்னதைச் செய்த ஜியோ..! ஜியோவின் 6 பைசா கட்டணத்துக்கு அதிரடி IUC top-up voucher..!

ஜியோ என்ன சொன்னாலும், ஏர்டெல் தன் வருமானத்தை விடுவதாக இல்லை. ஏர்டெல்லைப் பொறுத்த வரை ரிங்கிங் நேரம் 45 நொடிகள் இருக்க வேண்டும் என தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கிறார்கள். அதோடு இந்தியாவில் இருக்கும் அனைத்து நெவொர்க்குகளுக்கும் ரிங்கிங் நேரம் ஒரே போலத் தான் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கும் வரும் கால்களை அட்டண்ட் செய்ய போதுமான கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும், அதற்கு ஐ யூ சி கட்டணங்களும் வசூலிக்கப்பட வேண்டும் என வாதிட்டு இருக்கிறார்கள். எனவே 45 நொடிகள் + ஐ யூ சி கட்டணம் தான் சரியாக இருக்கும் என்கிறார்கள் ஏர்டெல் தரப்பினர்கள்.

ஏர்டெல் கேள்வி என்ன நியாயம் இது

ஏர்டெல் கேள்வி என்ன நியாயம் இது

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும், தங்கள் இஷ்டப்படி ரிங்கிங் நேரத்தை வைத்திருந்தால், ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்புகளை எடுத்துப் பேச போதுமான நேரம் இருக்கும். மற்றொரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு போதுமான நேரம் இருக்காது. எனவே ஒரே நிறுவனம் தொடர்ந்து மற்றொரு நிறுவனத்துக்கு மேலே சொன்ன ஐ யூ சி கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். ஒரே நிறுவனம் ஐ யூ சி கட்டணத்தைச் செலுத்தி, அதிக நஷ்டத்தைச் சுமக்க வேண்டி இருக்கும்.

சமநிலை பிரச்னை உதாரணம்

சமநிலை பிரச்னை உதாரணம்

உதாரணமாக, ஜியோ நிறுவனம் தன் ரிங்கிங் நேரத்தை 25 நொடியாக வைத்திருக்கிறது. ஏர்டெல் 45 நொடியாக வைத்திருக்கிறார்கள். ஜியோ வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அழைத்தால், ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளரின் 25 நொடி அழைப்பை எடுக்கும் வாய்ப்பு குறைவு தான். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைத்தால் 45 நொடி அழைப்பை எடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே ஏர்டெல் தான் ஜியோவுக்கு ஐ யூ சி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே ஏர்டெல் கூடுதல் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

முதலீடு

முதலீடு

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் சுமாராக 40,000 கோடி ரூபாய் தொகையை நெட்வொர்க் தொழில்நுட்பத்துக்காக முதலீடு செய்து இருக்கிறார்களாம். ஏர்டெல் நிறுவனத்தின் 32.8 கோடி வாடிக்கையாளர்களில் 10.7 கோடி பேர் மட்டும் தான் 4ஜி இணைய சேவையைப் பயன்படுத்துகிறார்களாம். மீதமுள்ள 22 கோடி பேர் இன்னமும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். அதாவது வாய்ஸ் கால்களைத் தான் அதிகம் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே மேலே சொன்னது போல, 2ஜி & 3ஜி அழைபுகளுக்குத் தான் இந்த ஐ யூ சி கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனச் சொல்லி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நஷ்டம்

நஷ்டம்

ஏற்கனவே, மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள், தங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுடன் பேச உதவி செய்யும் கனெக்டிவிட்டி சேவையை வழங்க, டிராய் நிர்ணயித்து இருக்கும் ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்கிற ஐ யூ சி கட்டணத்தை விட கூடுதல் செலவாகிக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறது ஏர்டெல். இப்படி தன் 22 கோடி வாடிக்கையாளர்களின் அழைப்புச் சேவையை சரியாக வழங்க வசூலிக்கும் இந்த ஐ யூ சி கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது எனச் சொன்னால் எப்படி..? என ஏர்டெல் தரப்பினர் கேட்பதாகத் தான் நமக்குப் புரிகிறது. இந்த விளக்கத்தைக் கேட்ட பின், ஏர்டெல்லின் வாதம் சரியாகத் தானே படுகிறது..? இப்போது ஜியோவின் வாதத்தைப் பாருங்களேன்..!

ஜியோ தரப்பு

ஜியோ தரப்பு

ஜியோ தரப்பிலோ, ஐ யூ சி கட்டணம் இருக்கக் கூடாது. ரிங்கிங் நேரம் 20 - 25 நொடிகள் தான் இருக்க வேண்டும் என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நொடி ரிங்கிங் நேரத்தைக் குறைப்பதால் இந்தியாவின் அலை வரிசைகளை இன்னும் சிறப்பாகவும் முழுமையாகவும் பயன்படுத்த முடியும். ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 94% கால்கள் 25 நொடிகளுக்குள்ளேயே பதிலளிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதோடு நெட்வொர்க்குகளின் ரிங்கிங் நேர விவகாரம், டிராயின் வரையறைக்குள் கொண்டு வரக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

மேலும், ரிலையன்ஸ் ஜியொ நிறுவனத்தின் ரிங்கிங் நேரத்தை 25 நொடிகளாக குறைத்த பின், எல்லோரும் ஆச்சர்யப்படும் விதத்தில், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் அவுட் கோயிங் கால்களைச் செய்து இருக்கிறார்களாம். கடந்த ஜூன் 2019 நிலவரப் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாய்ஸ் காலில் 64 சதவிகிதம் அவுட் கோயிங் தான் போய் இருக்கிறதாம். ஆக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் ரிங்கிங் நேரத்தை குறைத்துக் கொண்டதால் லாபம் எதுவும் அடையவில்லை என்பது போலப் பேசி இருக்கிறார்கள். ஆனால் இதை ஜியோ தரப்பினர், வாயைத் திறந்து சொல்லவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.

உலக தரம்

உலக தரம்

எல்லா பொருட்கள் மற்றும் சேவைகளில் உலக தரம் என்பது ஒரு நல்ல பெஞ்ச் மார்க் தானே. உலக டெலிகாம் சேவைகளில் 15 - 20 நொடிகள் தான் ரிங்கிங் நேரம் என ஜியோ ஒரே போடாக போட்டிருக்கிறது. ஆக ஜியோ, உலக தரத்தை விட 5 நொடிகள் கூடுதலாகத் தான் ரிங்கிங் நேரத்தை நிர்ணயித்து இருப்பது உலக தரத்தை விட அதிகமானது என்றும் விவாதத்தை முன் வைத்து இருக்கிறார்கள். இதை எல்லாம் விட உள்நாட்டில் டெலிகாம் நெட்வொர்க்குகளின் ரிங்கிங் நேரத்தை இதுவரை எந்த ஒரு அமைப்பும் கண்காணிக்கவில்லை. எனவே டெலிகாம் நிறுவனங்களுக்கு ரிங்கிங் நேரத்தை நிர்ணயிக்கும் உரிமை உண்டு எனவும் வாதிட்டு இருக்கிறார்கள் ஜியோ தரப்பினர்கள். ஆக தன் ரிங்கிங் நேர சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைப்பதோடு ஐ யூ சி கட்டணத்தையும் காலி செய்ய வலியுருத்திக் கொண்டு இருக்கிறது.

கட்டணப் பிரச்னை

கட்டணப் பிரச்னை

டிராய் அமைப்பு தன் ஐ யூ சி கட்டணத்தை வரும் ஜனவரி 01, 2020-க்குள், சொன்ன படி கைவிடவில்லை என்றால், டிராயின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகும். அதோடு இந்திய டெலிகாம் துறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சிதைந்து போகும். மிக முக்கியமாக ஜனவரி 01, 2020-க்குப் பின் இலவச வாய்ஸ் கால் சேவை மிகப் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகும். மெல்ல வாய்ஸ் கால்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கும் என தன் கவலையை பதிவு செய்திருக்கிறது ஜியோ. இதுவரை வரும் ஜனவரி 01, 2020-க்குள் ஐ யூ சி கட்டணத்தை ரத்து செய்யவில்லை என்றால், ஜியோ தன் இலவச வாய்ஸ் கால் சேவையை நிறுத்திக் கொள்ளும் அல்லது ஜியோ தன் வாடிக்கையாளர்களின் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் எனச் சொல்ல வில்லை என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

வொடாஃபோன் ஐடியா தரப்பு

வொடாஃபோன் ஐடியா தரப்பு

ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு இடையிலான இந்த சண்டையில், இரண்டு தரப்பின் பக்கமும் சாயாமல், தன் கருத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது வொடாஃபோன் ஐடியா. இவர்கள் ரிங்கிங் நேரத்தை 30 நொடிகள் நிர்ணயிக்க வேண்டும் + ஐ யூ சி கட்டணமும் வசூலிக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். அதோடு ரிங்கிங் நேரத்தை மற்ற நிறுவனங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் எனவும் புதிய யோசனையைச் சொல்லி இருக்கிறாதர்கள். உதாரணமாக ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர், வொடாஃபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளருக்கு அழைத்தால், ஏர்டெல்லின் அழைப்பு எவ்வளவு நேரத்தில் துண்டிக்கப்பட வேண்டும் என வொடாஃபோன் ஐடியா தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

2ஜி 3ஜி சாதனங்கள்

2ஜி 3ஜி சாதனங்கள்

இந்தியாவில் 4ஜி பெரிய அளவில் பரவத் தொடங்கிய பின்னும் கூட, இன்னும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 80 லட்சம் முதல் 100 லட்சம் 2ஜி மற்றும் 3ஜி மொபைல் ஃபோன்கள் விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே அவர்களுக்கான சர்க்யூட் ஸ்விட்ச் தொழில் நுட்பங்களையும் வழங்க வேண்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறது வொடாஃபோன் ஐடியா. ஆக இத்தனை பேர் வாய்ஸ் கால்களை மட்டுமே நம்பி மொபைல் ஃபோன்களை வாங்கும் போது, எப்படி ஐ யூ சி கட்டணங்களை வசூலிக்காமல் இருப்பது அல்லது ஐ யூ சி கட்டணத்தை ஓரே அடியாக ரத்து செய்வது எனக் கேள்வி எழுப்பும் விதத்தில் தன் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கிறது வொடாஃபோன் ஐடியா.

வாதச் சுருக்கம்

வாதச் சுருக்கம்

ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐ யூ சி கட்டணத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அதிலும் ஏர்டெல் 2022 வரை ஐ யூ சி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதே போல ஐ யூ சி சிக்கலைத் தொடங்கிய ரிங்கிங் நேர பிரச்னைக்கு ஏர்டெல் 45 நொடிகளையும், வொடாஃபோன் ஐடியா 30 நொடிகளையும் நிர்ணயிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஜியோவோ, ஜனவரி 01, 2020 உடன் இந்த ஐ யூ சி கட்டணமே இருக்கக் கூடாது, அதை மீறினால் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் அதிகரிக்கலாம் என எச்சரித்து இருக்கிறது. அதோடு ரிங்கிங் நேரத்தை நெவொர்க்குகள் தீர்மானிக்க்கட்டும் என தன் தரப்பு நியாயங்களைச் சொல்லி வாதிடுகிறது.

இந்த பிரச்னையால் யாருக்கு என்ன பிரச்னை வரப் போகிறது, யார் நஷ்டமடையப் போகிறார்கள் என்பதை டிராயின் முடிவு வெளியான பின் தான் சொல்ல முடியும். பொறுத்திருந்து பார்ப்போம். வெல்வது ஏர்டெல் தரப்பா அல்லது ஜியோ தரப்பா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Free Voice call is in risk due to IUC charge Jio rising voice against IUC

Airtel is asking the Indian telecom regulatory TRAI to allow to collect IUC charges till 2022. But the Reliance jio is refusing to allow to collect IUC and it is demanding to abolish IUC from Jan 01, 2020. Jio warned that the IUC regime will end up the free voice call and intimate telecom operator to collect charges for voice call.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X