டெல்லி: 2024ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த 12 மாதத்தில் இந்தியா அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை கண்டது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு தேர்தல் ஆண்டாக அமைந்தது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இது வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024 : பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக கூடிய நபர் என்ற பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் 240 இடங்களையும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 293 இடங்களையும் கைப்பற்றி மத்தியில் ஆட்சியை பிடித்தது.
ராமர் கோயில் திறப்பு: 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் ராமர் கோயிலை திறந்து வைத்தார். வரலாற்று ரீதியாக முக்கியமான இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி தான் முக்கியமான நபராக இருந்தார். ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நரேந்திர மோடியை சிறப்பு எஜமான் என அறிவித்து கௌரவப்படுத்தினர்.
போரில் ஈடுபட்டுள்ள தலைவர்களுடன் பேச்சு: 2024ஆம் ஆண்டில் போரில் ஈடுபட்டிருக்கும் இரண்டு நாடுகளின் அதிபர்களையும் சந்தித்து பேசிய உலக தலைவர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு கிடைத்தது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும் , உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியையும் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டிற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இருநாட்டு தலைவர்கள் இடமும் அமைதியான முறையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்: ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்து விடும் என பலரும் கூறி வந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஹரியானாவில் முதலமைச்சரை மாற்றியது. இது தேர்தல் முடிவுகளில் வலுவாக எதிரொலித்தது. ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அரசு வெற்றிகரமாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது.
இதுவே அரசுக்கு கிடைத்த பாதி வெற்றியாக கருதப்படுகிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரே முறை நடத்தப்படும் இதனால் செலவினங்கள் குறையும் என்கிறது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications