இந்தியாவில் சமீப காலமாக வீடு விற்பனை துறை விண்ணை எட்டி வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டிலும் விற்பனை விகிதம் படுஜோராக இருக்கிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 5.77 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2023-ஆம் ஆண்டு விற்பனையான 5.56 லட்சம் சொத்துக்களில் இருந்து 4 சதவீதம் அதிகமாகும். ஆக 2024-ஆம் ஆண்டில் மக்கள் தாங்கள் வாங்கிய சொத்துக்காக மொத்தமாக ரூ.4 லட்சம் கோடி செலவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 2 சதவீத அதிகரிப்பாகும்.
இந்தியாவில் வீடு விற்பனை துறையின் போக்கை ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அறிக்கையின்படி மும்பை வீடு விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. 1.3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் 2024-ஆம் ஆண்டில் விற்பனையாகியுள்ளன. இந்த வீடுகளை வாங்குவதற்காக மக்கள் ரூ. 1.6 லட்சம் கோடி செலவு செய்துள்ளனர், அடுத்ததாக புனே, பெங்களூர் ஆகியவை 2-வது இடத்தில் உள்ளது. பெங்களூரில் 0.8 லட்சம் வீடுகளும், புனேவில் 1 லட்சம் வீடுகளும் விற்பனையாகியுள்ளன.

கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த துறை வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டில் சற்று மிதமான வளர்ச்சி தான் தென்படுகிறது. இந்த வருடம், வருடாந்திர விற்பனை 5 லட்சம் வீடுகளையும், மொத்த பரிவர்த்தனை மதிப்பு ரூ.4 லட்சம் கோடியையும் தாண்டி உள்ளது. இது 2020-ஆம் ஆண்டு விற்பனையான சராசரி விகிதத்தை விட அதிகமாகும். 2025 ஆம் ஆண்டில் குடியிருப்பு தேவை மற்றும் விநியோகம் அதிகரிக்கும் என்று ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ தனுஷ் ஜோரி கூறியுள்ளார்.
மேலும் சொத்து விற்பனையை பொருத்தவரையில், இந்தியாவின் மேற்கு பகுதிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நவி மும்பை, புனே போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் மொத்தமாக பரிவர்த்தனை செய்யப்பட்ட மதிப்பான 69 சதவீதத்தில் 61 சதவீதத்திற்குப் பங்களித்துள்ளன. தெற்கு பகுதியில் பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவை 25% பங்களித்துள்ளன. பெங்களூருவில் கிட்டத்தட்ட 0.8 லட்சம் பதிவுகள் பதிவாகியுள்ளன.
குருகிராமில் கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வீட்டு விலை 132 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி ரூ. 5820-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 13,500-க்கு விற்பனை ஆகிறது. குருகிராமை தொடர்ந்து நொய்டாவில் சொத்து விலை 67% அதிகரித்து இருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி 4500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2024-ஆம் ஆண்டு ஒரு சதுர அடி 7500-ஐ எட்டியுள்ளது. பெங்களூரிலும் 66% விலை உயர்வு தென்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் 5450-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சதுர அடி நிலம் 2024-ஆம் ஆண்டில் 9,050 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications