டெல்லி: சில விஷயங்களை கேள்விப்படும் போது ரூம் போட்டு யோசிப்பீங்களோ என நினைக்கத் தோன்றும் அப்படித்தான் இந்த செய்தியும். ஒரு 24 வயது நபர், வயதான நபர் போல தன்னுடைய தோற்றத்தை மாற்றி கனடாவுக்கு செல்ல முயன்று அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
24 வயதான குரு சேவக் சிங் என்ற இளைஞர், தன்னை ஒரு மூத்த குடிமகன் போல காட்டுவதற்காக தன்னுடைய முடி மற்றும் தாடி மீசை அனைத்திற்கும் வெள்ளை நிறத்தில் டை அடித்துள்ளார். இப்படி தன்னுடைய தோற்றத்தை 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு மூத்த குடிமகன் போல மாற்றிக் கொண்டு டெல்லி விமான நிலையத்திலிருந்து கனடாவிற்கு விமானத்தில் அவர் புறப்பட இருந்த நிலையில் அதிகாரிகள் அவரை பிடித்தனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சிஐஎஸ்எப் அதிகாரிகள் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துக்குரிய வகையில் அமைந்திருந்தன. அவர் 67 வயதான ரசவிந்தர் சிங் சஹோத்தா என்ற பெயரில் ஒரு பாஸ்போர்ட்டை காட்டியுள்ளார்.
பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படம் அதில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய வயது மற்றும் நேரில் அவர்கள் பார்க்கக்கூடிய நபரின் உடல்வாகு குரல் ஆகியவற்றை ஒப்பிட்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.பாஸ்போர்ட்டில் வயதானவர் என இருக்கிறது, ஆனால் இந்த நபர் பார்ப்பதற்கு இளமையான உடல் வாகை கொண்டிருக்கிறார்.
இவரது குரலும் இளமையான நபரை போலவே இருக்கிறது என உணர்ந்த அதிகாரிகள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பெயர் குரு சேவக் சிங் என்றும் வயது 24 என்றும் தெரிய வந்தது.
ஆனால் 67 வயது நபர் என போலி பாஸ்போர்ட்டில் அவர் கனடாவுக்கு செல்ல முயன்றது கண்டறியப்பட்டது. வயதானவர் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அவர், மீசை , தாடிக்கு வெள்ளை நிற டை அடித்து , கண்ணாடி அணிந்து வந்துள்ளார்.
அவருடைய உண்மையான பாஸ்போர்ட்டையும் அவர் உடன் வைத்திருந்தது பின்னர் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அந்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருவேளை வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக மோசடி செய்யும் கும்பல் இப்படி போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்து அனுப்பி வருகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications