புனே: புனேவை சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த 26 வயது பெண் பணிச்சுமையால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்னெஸ்ட் அண்ட் யங் என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம் புனேவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது இளம் பெண் பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாயார் கூறியுள்ளார்.
அன்னா செபஸ்டியன் பெராயில் என்ற பட்டயக் கணக்காளர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் எர்னெஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார் . ஆனால் இந்த 4 மாத காலத்திலேயே அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளின் உயிரிழப்புக்கு பணிச்சுமையே காரணம் என அவரது தாயார் அனிதா கூறியுள்ளார்.

எர்னெஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தின் தலைவரான ராஜு மேமானிக்கு அனிதா கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் "எனது மகள் பள்ளி கல்லூரியில் நன்றாக பயின்றவள் , பட்டய கணக்காளர் தேர்விலும் டிஸ்டிங்சனில் தேர்ச்சி பெற்றவள். இதுதான் அவளது முதல் பணி ஆர்வத்துடன் பணியை தொடங்கினாள் ஓய்வின்றி உழைத்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்து முடித்தாள். இருந்தாலும் நீண்ட நேரம் வேலை செய்தது அவளுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பை கொடுத்தது" என தன்னுடைய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
"மார்ச் மாதம் வேலையில் சேர்ந்தவள் ஜூலை மாதம் உயிரிழந்துவிட்டாள், வேலைக்காக தன்னுடைய உயிரையே அவர் கொடுப்பாள் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. குறிப்பாக ஷிப்ட் நேரம் முடியும்போது அவரது மேலாளர் அவருக்கு பணிகளை வழங்குவார்" என தாயார் தன்னுடைய கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் ஓவர் டைம் பணியாற்றி வந்த தன்னுடைய மகள் வார விடுமுறை நாட்களில் கூட ஓய்வு எடுக்காமல் வேலை செய்து வந்தார்" என குறிப்பிட்டுள்ளார்.
"இப்படி சுமை நிறைந்த வேலைக்கு செல்ல வேண்டாம் வேலையை விட்டு விடு என நாங்கள் எங்கள் மகளிடம் பலமுறை தெரிவித்தோம். ஆனால் நான் இப்போதுதான் வேலையில் சேர்ந்து இருக்கிறேன் இந்த வேலையில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது எனவே நான் வேலையை விட மாட்டேன் என ஆர்வத்துடன் தன்னுடைய வேலையை செய்து வந்தாள் ஆனால் தற்போது அந்த வேலையே அவளுக்கு எமனாக மாறிவிட்டது" என அந்த தாயார் கூறியுள்ளார்.
இப்படி எந்த நிறுவனத்திற்காக எனது மகள் விழுந்து விழுந்து பணியாற்றினாளோ அவளது இறுதி சடங்குக்கு அவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து ஒருவர் கூட வரவில்லை என கண்ணீர் மல்க அவர் தன்னுடைய கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். எனது மகளை போலவே இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் உயிரிழக்க கூடாது என்பதற்காக மட்டுமே நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன் என அனிதா அதில் தெரிவித்துள்ளார்.
இப்படி புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவருக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவது எந்த வகையில் சரியானதாக இருக்கும். குறிப்பாக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட அவளுக்கு இந்த நிறுவனம் வேலை வழங்கி பெரிய அளவிலான மன அழுத்தத்தை தந்தது என தெரிவித்துள்ளார்.
ஜூலை 6ஆம் தேதி தன்னுடைய மகளின் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற போது அவள் தனக்கு அவ்வப்போது நெஞ்சடைப்பதாக கூறியதாகவும் அது தொடர்பாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று இசிஜி உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்ததாகவும் அதில் அனைத்தும் நார்மலாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இவர் சரியாக உறங்காமல் இருக்கிறார் என மருத்துவர் கூறியதாகவும், தாமதமாக உண்பது சரியான உறக்கமின்மை ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறினார்களாம். அப்போதே வேலையை விடு என கூறியதற்கு மகள் மறுத்துவிட்டு தற்போது உயிரையே விட்டு விட்டார் என தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications