போபால்: அண்மைக்காலமாக சத்தான காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து விட்டது. அந்த வகையில் நாம் உண்ணும் பழங்களில் அவகேடோவும் ஒன்று.
இந்தியாவில் தற்போது இந்த பழத்தின் தேவை அதிகரித்துவிட்டது. எனவே அவகேடோவின் தேவையை உணர்ந்து கொண்ட ஒரு இளைஞர் அதனை விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

ஹர்ஷித் கோதா என்பவர் போபாலை சேர்ந்தவர். இவர் லண்டனில் பிபிஏ பயின்று வந்தார், அப்போது அவகேடோ வாங்கி உண்டுள்ளார். அது இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு என்பதை படித்த அவர் லண்டனில் வசிக்கும் மக்கள் ஏன் இஸ்ரேலில் விளையக்கூடிய அவகேடோவை வாங்கி உண்கிறார்கள். அதில் என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஹர்ஷித் கோதாவுக்கு ஏற்பட்டது.
அப்போது 22 வயதாகி இருந்த ஹர்ஷித் தன்னுடைய இன்டர்ன்ஷிப்பை விடுத்து லண்டனில் இருந்து இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கே தங்கி இருந்து அந்த நாட்டில் விளையும் அவகேடோவில் என்ன சிறப்பு இருக்கிறது, அங்கே என்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவகேடோவை விளைவிக்கிறார்கள் என்பன குறித்த விவரங்களை தெரிந்து கொண்டார். பின்னர் மீண்டும் லண்டன் திரும்பிய அவர் தன்னுடைய பிபிஏ படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பினார்.
இந்தியாவிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அவர் அவகேடோ வேளாண்மையில் ஈடுபட தொடங்கினார். 2019 ஆம் ஆண்டில் ஹர்ஷித் தன்னுடைய அக்ரி ஸ்டார்ட்அப் இந்தோ இஸ்ரேல் அவகேடோவை போபாலில் தொடங்கினார். இதற்காக 5 ஏக்கர் நிலம் வாங்கி அதில் அவர்கேடோ செடிகளை நட்டார். இதற்காக அவர் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
கொரோனா தொற்று காரணமாக முதலில் இஸ்ரேலில் இருந்து அவகேடோ செடிகளை இறக்குமதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து வெற்றிகரமாக அவகேடோ செடிகளை நட்டு தற்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.
தற்போது ஹர்ஷித் தன்னை நாடி வருபவர்களுக்கு அவகேடோ செடிகளை விற்பனை செய்வதோடு, அதனை எப்படி வளர்க்க வேண்டும் ,எப்படி இதனை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும் என்பது குறித்து தெரிவித்து வருகிறார்.
தற்போது வரை 20,000 செடிகளை இஸ்ரேல் நாட்டில் இருந்து இவர் இறக்குமதி செய்துள்ளார். தற்போது அவகேடோ பழங்கள் மற்றும் செடிகளை விற்பனை செய்து வருகிறார். இவரிடம் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் செடிகளை வாங்கி செல்வதாக தெரிகிறது. தன்னுடைய நர்சரி கார்டனை 100 ஏக்கர் அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
தற்போது 28 வயது ஆகக்கூடிய ஹர்ஷித் ஆண்டுக்கு தன்னுடைய சிறிய நர்சரி கார்டன் மூலம் 50 லட்சம் ரூபாய் வருமானம் பெறுகிறார். கூடுதலாக பழங்களையும் விற்பனை செய்கிறார். இந்தியாவில் அவகேடோ விவசாயம் மற்றும் தொழில் குறித்த புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications