கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெல்லண்டூர் எக்கோஸ்பேஸ் அருகே சஜாபூர் ரோடு - ரிங் ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 1.5 கிலோமீட்டர் பயணிக்க 3 லிட்டர் பெட்ரோல் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிகம் காணப்படும் இந்த போக்குவரத்து நெரிசலால், குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த சாலையை பயன்படுத்தும் பலரும், சமூக வலைத்தளங்களில் தங்கள் கார்களின் டாஷ்போர்டு புகைப்படங்களை பகிர்ந்து, வண்டிகள் சற்று கூட நகராத நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், "1.5 கிலோமீட்டர் பயணிக்க 3 லிட்டர் பெட்ரோல் வீணாகி 22 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதுதான் இங்கு உண்மையான நிலை என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், "வழக்கமாக 10 நிமிடங்களில் முடிக்கும் பயணம், இப்போது 45 நிமிடங்கள் ஆகிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார். சாதாரணமாக ஒரு கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 முதல் 15 கிமீ வரை மைலேஜ் தரும். ஆனால், பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், 3 முதல் 6 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தருகிறது.

எக்ஸ் தளத்தில் மேலும் ஒரு பயனர், "ஒவ்வொரு நாளும் காரில் அங்குலம் அங்குலமாக நகரும் சூழ்நிலையே உள்ளது. பொறுமையைக் கடுமையாக சோதிக்கிறது. இவ்வளவு பெரிய நகரத்தில் இதற்கு தீர்வு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், கிருஷ்ணா என்பவர், "என்னுடைய ஹோண்டா சிவிக் காரில், 2.1 கிமீ பயணிக்க 3 லிட்டர் வரை பெட்ரோலும், 50 நிமிடங்களும் எடுத்தது. இதற்காக ரூ.300-க்கு மேல் செலவழித்தாலும், வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "திங்கள் அன்று என்னுடைய எம்.ஜி. ஹெக்டர் காரில் 2 கிமீக்கும் குறைவான பயணத்திற்கு 2.8 லிட்டர் பெட்ரோல் செலவாகியதாக தெரிவித்துள்ளார். மேலும், வேலை அழுத்தத்தை விட, போக்குவரத்து அழுத்தம் மோசமாக இருப்பதாக" விமர்சித்துள்ளார்.
ORR அருகே அரசு சமீபத்தில் புதிய போக்குவரத்து வழித்தட மாற்றங்களை மேற்கொண்டது. இதனால் பழைய வழிகள் மீண்டும் அமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த மாற்றங்கள் சரியான திட்டமிடல் இல்லாமல் விரைவாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சர்வீஸ் சாலைகளும் முறையாக பராமரிக்கப்படாததால், அனைத்து வாகனங்களும் பெரிய சாலைகளிலேயே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
ஐடி துறையில் பணியாற்றும் மல்லிகார்ஜூன் என்பவர், "சாலை போக்குவரத்துக்கு கட்டமைப்புகள் மிக அவசியம். கூடுதலாக பாலங்கள், நிலத்தடி சாலைகள் போன்றவை கட்டப்பட வேண்டும். அதேசமயம், BMTC பேருந்து சேவைகள் அதிகமாக கொண்டு வர வேண்டும். நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்காக பேருந்து சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல், ரவிக்குமார் என்பவர் கூறுகையில், "இப்போது 2.5 கிலோமீட்டர் தூரத்தை கடக்க எனக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஆனால், சாதாரண சூழலில் அந்த தூரத்தை 10 முதல் 15 நிமிடங்களில் என்னால் கடக்க முடியும். அதிக நேரம் சாலையில் நின்று கொண்டிருப்பதால், காரில் பெட்ரோல் வீணாகிறது. மேலும், இத்தகைய போக்குவரத்து நெரிசல் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இத்தகைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications