ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சுத்தமான எரிசக்தி புரட்சி, பயோ எனர்ஜி புரட்சி மற்றும் டிஜிட்டல் புரட்சி ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் மூன்று முக்கியப் புரட்சிகள் என்று கூறினார்.
பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தப் புரட்சிகள் இந்தியாவைப் பெரிய அளவில் மாற்றுவதற்கான முக்கியமான வழியாக உள்ளது என்று கூறினார்.
இந்த 3 புரட்சியிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் இயங்கி வருவது தான் கூடுதல் சிறப்பு.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி கிளீன் எனர்ஜி துறையில் முதலீடு செய்வதை நீண்ட காலமாக முன்வைத்து வருவது மட்டும் அல்லாமல் முயற்சி செய்து வருகிறார். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் நெட் ஜீரோ இலக்கு ஆகியவற்றின் மீது இந்தியாவும் உலக நாடுகளும் அதிகப்படியான கவனம் செலுத்தியது.
நெட் ஜீரோ இலக்கு
மோடி அரசு நெட் ஜீரோ இலக்கை அடித்தளமாக வைத்துக்கொண்டு பல திட்டங்களையும், முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி AGM கூட்டத்தின் போது, ரிலையன்ஸ் கிளீன் எனர்ஜி வர்த்தகம் அதன் தற்போதைய வளர்ச்சி பிரிவுகளைக் காட்டிலும் 5-7 ஆண்டுகளில் முந்தி விடும் எனப் பேசினார்.
குஜராத்தின் ஜாம்நகர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத்தின் ஜாம்நகரில் 5,000 ஏக்கரில் திருபாய் அம்பானி க்ரீன் எனர்ஜி கிகா காம்ப்ளக்ஸ் அமைக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டுத் தற்போது இப்பகுதியில் 5 தொழிற்சாலைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்தக் கிளீன் எனர்ஜி வர்த்தகத்தை மொத்தமாக முகேஷ் அம்பானியும், அவரது இளைய மகனான அனந்த் அம்பானி ஆகியோரும் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
கிளீன் எனர்ஜி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளீன் எனர்ஜி பிரிவில் மட்டும் மூன்று ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, முழுமையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறார்.
இந்தியா 2047
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இருக்கும் காரணத்தால், 2047 ஆம் ஆண்டில் இந்தியா 40 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக வளரும் என்றும், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் முகேஷ் அம்பானி பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய போது கூறியுள்ளார்.
கிளீன் எனர்ஜி & பயோ எனர்ஜி புரட்சி
கிளீன் எனர்ஜி புரட்சி மற்றும் பயோ எனர்ஜி புரட்சி ஆகியவை நாட்டில் எனர்ஜி நிலையான நாடாக மாற்றும், அதே வேளையில் டிஜிட்டல் புரட்சியானது எனர்ஜியை திறனுள்ள வகையில் பயன்படுத்த நமக்கு உதவும். இந்த மூன்று புரட்சிகளும் இணைந்து இந்தியாவும் உலகமும் பூமியை பருவகாலப் பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.
கௌதம் அதானி
கிளீன் எனர்ஜி துறையில் முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் இந்தியாவில் பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானியும் இறங்கியுள்ளதால் போட்டி கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் இத்துறை வர்த்தகத்திற்காக இந்தியா முதல் வெளிநாட்டு நிறுவனங்களையும், முதலீடும் செய்துள்ளது.
டிஜிட்டல் புரட்சி
டிஜிட்டல் புரட்சியில் உருவாகும் வர்த்தகத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவை, பிராண்ட்பேன்ட் முதல் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், IOT ஆகியவற்றிலும் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications