தமிழக நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் டைடல் பூங்காக்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்டு வருவதை குறிப்பிட்ட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் 1070 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக டைடல் பூங்காக்களை கட்டி வருவதை சுட்டிக்காட்டினார். அதே போல விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய இடங்களில் 7 நியோ டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நகரங்களில் நியோ டைடல் பூங்காக்கள் 388 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார். இதனால் 25,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார்.
இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐடி வேலைகள் என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு படிப்படியாக முன்னேறி வருகிறது. டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் மூலம் ஐடி நிறுவனங்கள் சென்னை, கோவை போன்ற நகரங்களை கடந்து இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களையும் சென்றடைகின்றன. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறிய அவர் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி நடப்பதாக கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் 250க்கும் அதிகமான உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் உலகளாவிய திறன் மையங்கள் அமைக்கப்படுவது ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
விரைவில் தமிழ்நாட்டிற்கான கப்பல் கட்டுமான கொள்கை அறிவிக்கப்படும் என தெரிவித்த அவர் தூத்துக்குடியில் 5,200 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என அறிவித்தார்.அதே போல வளர்ச்சி அடைந்து வர கூடிய செமி கண்டக்டர் பிரிவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஏதுவாக தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 2030 விரைவில் அறிவிக்கப்படும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications