பெங்களூரு: ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனங்களின் இந்திய கிளைகளில் 30,000 இந்தியர்கள் பணி புரிகிறார்கள் என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 2024 தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இதன் 27ஆவது பதிப்பின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் ஆஸ்திரேலியாவும் ஒரு கூட்டாளியாக இருக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் பிலிப் கிரீன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளன என்றும் இவற்றில் சுமார் 30,000 இந்தியர்கள் பணி புரிகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வேறொரு நாட்டில் தங்களுடைய இன் சோர்ஸ் ஐடி மற்றும் தொழில் செயல்முறைகளுக்கான அலுவலகத்தை நிறுவுவதே குளோபல் கெபாபிலிட்டி சென்டர் (Global Capability Centre ) எனப்படும் ஜிசிசி மையங்கள் ஆகும்.
வங்கி, நிதி தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் சுரங்க பணிகளை சேர்ந்த பல்வேறு ஆஸ்திரேலிய நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை இந்தியாவில் நிறுவியுள்ளன. இவற்றில் சுமார் 30,000 இந்தியர்கள் முழுநேர ஊழியர்களாக பணியில் இருக்கின்றனர் என பிலிப் கூறியுள்ளார். மேற்கொண்டு பல்வேறு ஆஸ்திரேலிய நிறுவனங்களும் தங்களுடைய ஜிசிசி மையங்களை இந்தியாவில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை இந்தியாவில் அமைப்பதற்கு பெருமளவில் விருப்பம் காட்டுகின்றன.
தற்போது இந்தியாவில் மொத்தம் 1800 ஜிசிசி மையங்கள் இருப்பதாகவும், 2024 ஆம் ஆண்டில் இவற்றின் வருமானமும் 40% உயர்ந்து 65 மில்லியன் டாலர்கள் என்ற நிலையை எட்டி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சுமார் 19 மில்லியன் பேர் இத்தகைய ஜிசிசி மையங்களில் பணிபுரிகிறார்கள். 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி-யில் ஜிசிசி மையங்களின் பங்களிப்பு 46 பில்லியன் டாலர்கள் ஆகும். இது 2030 ஆம் ஆண்டில் 121 பில்லியன் டாலர்கள் அதாவது இந்தியாவின் மொத்த ஜிடிபி -யில் 3.5% என்ற அளவை எட்டும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனங்கள் டெல்லி, நொய்டா, குரு கிராம், பெங்களூர் ஆகிய நகரங்களில் தங்களுடைய ஜிசிசி மையங்களை பெரும்பாலும் அமைத்துள்ளன. ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் ஜிசிசி மையங்களை பயன்படுத்துகின்றன என பிலிப் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications