பெங்களூருவில் போதை பொருட்களுடன் பார்ட்டி நடத்திய 31 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் சீன நாட்டவர்களும் இடம்பெற்று இருப்பதாக பெங்களூரு காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரம் பார்ட்டி கலாச்சாரத்திற்கு பெயர் போனது. சனிக்கிழமை அன்று இரவு என்றால் ஐடி ஊழியர்களும் இளைஞர்களும் பார்ட்டிக்கு செல்வது வழக்கம். இங்கே பார்ட்டி நடத்த அனுமதி உண்டு என்றாலும் போதை பொருட்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. இந்நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை பெங்களூரின் கண்ணமங்கலா பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் அதிக சத்தத்துடன் டிஜே இசையுடன் விடிய விடிய பார்ட்டி நடந்திருக்கிறது.

அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக தேவனஹள்ளி பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு வந்து சோதனை நடத்திய போது அங்கே பார்ட்டி நடைபெற்றது தெரிய வந்தது. இளம் பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானவர்கள் இந்த பார்ட்டியில் இடம் பெற்றிருந்தனர். மேலும் காவல்துறையினர் அங்கே ஆய்வு நடத்திய போது பிறந்த நாளுக்காக நடத்தப்பட்ட பார்ட்டியில் மது பானத்துடன் போதை மருந்து பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அங்கிருந்து 31 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த விருந்தில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் பெண்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. சீன நாட்டவர்களும் இடம்பெற்றிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். தங்களுக்கு பார்ட்டி நடப்பது தொடர்பாக தகவல் கிடைத்து அதிகாலை 5 மணியளவில் சென்று சோதனை நடத்தியதாக காவல்துறை துணை ஆணையர் சஜீத் தெரிவித்துள்ளார்.
இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவருமே பெங்களூரில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் என கூறியுள்ள அவர் சிலர் வெளிமாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் என தெரிவிக்கிறார். இந்த பார்ட்டியில் போதை மருந்து சப்ளையர்களும் இடம் பெற்றிருந்தனர் என கூறும் அவர், போதை மருந்து பயன்பாட்டை உறுதி செய்ய விருந்தில் பங்கேற்றவர்களின் ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
முதல் கட்ட விசாரணையில் 31 பேர் விருந்தில் கலந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். கொகைன், ஹைட்ரோகஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இந்த அதிரடி ஆய்வின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். பண்ணை வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். போதைமருந்து விநியோகஸ்தரே பிடிபட்டிருப்பதால் இது தொடர்பான பல தகவல்கள் விசாரணையின் போது வெளிவரலாம் என கூறுகிறார்.


Click it and Unblock the Notifications