இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வகும் நிலையில், சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ள காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை தொடர்ந்து மத்திய அரசு விதிக்கும் வரி அளவீடுகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியாவில் பல பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கத் திட்டமிட்ட 4 மாநில அரசுகள், எரிபொருள் மீது விதிக்கப்படும் வாட் வரியை குறைத்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் அடிப்படை காரணமாக இருந்தாலும், பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 90 ரூபாயைத் தாண்டியுள்ளதற்கு முக்கியமான காரணம் மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரி தான் எனத் தெளிவாகியுள்ளது.

சாமானிய மக்கள்
இந்தச் சூழ்நிலையில் தான் மக்கள் மத்திய அரசை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைத்து இதன் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வின் காரணமாகச் சாமானிய மக்கள் தினமும் வாங்கும் பால், காய்கறி, மளிகை பொருட்கள் முதல் அனைத்தும் தொடர்ந்து விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரியைக் குறைத்த 4 மாநில அரசு
மக்களின் பிரச்சனையைப் புரிந்துகொண்டுள்ள 4 மாநில அரசுகள், தொடர்ந்து மத்திய அரசின் முடிவுகளுக்குக் காத்திருக்காமல் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியான VAT வரியைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 4 மாநிலத்திலும் எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான்
மேற்கு வங்காள மாநில அரசு வாட் வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தலா ஒரு ரூபாய் குறைத்துள்ளது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜனவரி 29ஆம் தேதி எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகக் குறைத்துள்ளது.

அசாம், மேகாலயா
தேர்தலை எதிர்நோக்கும் அசாம் மாநிலம் கொரோனா காலத்தில் நிதி தேவைக்காக விதிக்கப்பட்ட கூடுதல் வரியைத் திரும்பப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மேகாலயா பெட்ரோல் லிட்டருக்கு 7.40 ரூபாயும், டீசலுக்கு 7.10 ரூபாயும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் எப்போது?
4 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியை தளர்த்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் எப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரி குறைக்கப்பட்டு இதன் விலை குறைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.