ஏப்ரல் 1 முதல் கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம்! PAN முதல் ஸ்பெண்டிங் லிமிட் வரை - செய்ய வேண்டியது?

உங்கள் பர்சில் இருக்கும் கிரெடிட் கார்டு இனி முன்போல இருக்காது. வரும் ஏப்ரல் 1 முதல் நிதித்துறை கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள், உங்கள் ஷாப்பிங் மற்றும் பணப் பரிவர்த்தனை முறையை மாற்ற போகின்றன. இனி விருப்பம்போல செலவு செய்ய முடியாது. ஏனென்றால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு 10 லட்சம் ரூபாய் செலவையும் வருமான வரித் துறை உன்னிப்பாக கவனிக்க தொடங்கிவிடும்.

பான் கார்டு இணைப்பு முதல் புதிய ஸ்பெண்டிங் லிமிட் வரை, கிரெடிட் கார்டு பயனர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 மாற்றங்கள் இதோ. இந்த விதிகளை மீறினால் அபராதம் முதல் கார்டு பிளாக் செய்யப்படுவது வரை பல சிக்கல்கள் ஏற்படலாம். ஆக புது நிதியாண்டு தொடங்கும் முன்பே உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள். முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஏப்ரல் 1 முதல் கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம்! PAN முதல் ஸ்பெண்டிங் லிமிட் வரை - செய்ய வேண்டியது?

வரும் ஏப்ரல் 01, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வருமான வரிச் சட்டம் 2025, லட்சக்கணக்கான மக்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் முறையை மாற்றியமைக்க உள்ளது. அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிப்பதில் தொடங்கி, கிரெடிட் கார்டு மூலம் வரி செலுத்தும் வசதி வரை பல முக்கிய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆக கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். இந்த புதிய மாற்றம் நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும், வரி ஏய்ப்பை தடுப்பதுமே முக்கிய நோக்கமாகும்.

1. அதிகப்படியான செலவுகள் மீது தீவிர கண்காணிப்பு

உங்கள் அதிகப்படியான கிரெடிட் கார்டு செலவுகள் இனி வருமான வரித்துறையின் நேரடி பார்வையில் இருக்கும். ஒரு நிதியாண்டில் டிஜிட்டல் முறையில் (கிரெடிட் கார்டு வழியாக) 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் நீங்கள் செலவு செய்தால், அந்த விவரங்களை வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும்.

நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டு பில்லை செலுத்த 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக பயன்படுத்தினாலும் அது அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும். ஏற்கனவே இத்தகைய கண்காணிப்பு இருந்தாலும், புதிய விதிகள் மூலம் வரி ஏய்ப்பை தடுக்க கூடுதல் நெருக்கடி கொடுக்கப்படலாம். ஆக நீங்கள் இனி கிரெடிட் கார்டு மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் எனில் அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

2. PAN கார்டு வாங்க கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் போதும்!

புதிய பான் (PAN) கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தி. உங்களிடம் வீட்டு வரி ரசீது அல்லது மின்சார பில் போன்ற வழக்கமான முகவரி சான்றுகள் இல்லை என்றால், உங்கள் கடந்த 3 மாத கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்-ஐ முகவரி சான்றாக பயன்படுத்தலாம். ஆனால் இதில் விண்ணப்பதாரரின் தற்போதைய முகவரி தெளிவாகவும், சரியாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

3. கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி செலுத்தலாம்!

இதுவரை நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் மட்டுமே வருமான வரி செலுத்த முடியும் என்று இருந்த நிலையில், இனி உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தியும் வரி செலுத்தலாம். இது வரி செலுத்துபவர்களுக்கு பணப்புழக்கம் மற்றும் கூடுதல் கால அவகாசத்தையும் தரும். இருப்பினும் கிரெடிட் கார்டு மூலம் வரி செலுத்தும்போது வங்கி வசூலிக்கும் செயல்பாட்டு கட்டணம் மற்றும் வட்டி விகிதங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் செலுத்தும் மொத்த தொகை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

4. கம்பெனி கார்டை சொந்த தேவைக்கு பயன்படுத்தினால் வரி!

உங்கள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டை, உங்கள் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.

உங்கள் நிறுவனத்தின் கார்டை, உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தினால், அந்த தொகை உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியாக கருதப்படும். அதற்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக நிறுவன கார்டுகளை வணிக ரீதியான பயணம், வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லுதல் அல்லது வேலை நிமித்தமாக மற்ற பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் அதற்கும் சரியான ஆவணங்களை நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும்.

5. இனி பான் இல்லாமல் கிரெடிட் கார்டு கிடையாது!

இனி கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது 'பான் கார்டு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லை என்றால், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து விடும்.

கார்டு மூலம் நீங்கள் செய்யும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை நேரடியாக, உங்கள் வரி பதிவுகளுடன் இணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் கார்டு வாங்குவது அல்லது நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+