இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கி வரும் ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 5 லட்சம் வீடுகள் பல்வேறு காரணங்களுக்காகக் கட்டிமுடிக்க முடியாமல் பாதியில் நிற்கிறது எனச் சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.
இதன் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகங்கள் முடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் இறுதியில் செய்யப்பட்ட இந்த ஆய்வில் முடங்கியுள்ள ரியல் எஸ்டேட் திட்டங்கள் 2013 மற்றும் அதற்கு முன்பு துவங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
NCR பகுதி
கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளில் பெருமளவில் தேக்கத்தில் இருப்பது NCR பகுதியில் தான். NCR பகுதியில் சுமார் 1.19 லட்சம் மதிப்பிலான 1.90 லட்ச வீடுகள் தற்போது கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய பகுதிகளில் 2.02 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 1.80 லட்ச வீடுகள் தேக்கத்தில் உள்ளது.
வட இந்தியா
இதில் முக்கியமாக மும்பை மற்றும் NCR பகுதிகளில் மட்டுமே மொத்த 5 லட்சம் வீடுகளில் 74 சதவீத வீடுகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் வட இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவிக்கிறது.
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வீடுகளைக் கட்டி முடிக்கப்படுவதில் ஏற்படும் கால தாமதம் இத்துறையின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்யும் இந்தத் தவறின் காரணமாக இத்துறையின் வளர்ச்சி வேகமும், மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையும் பெரிய அளவில் பாதிக்கிறது என இந்த ஆய்வை செய்த அனார்க் ப்ராபெர்டி நிறுவனத்தின் தலைவர் அன்ஜூ பூரி தெரிவித்துள்ளார்.
2021ல் நல்ல வளர்ச்சி இருக்கும்
ஆனால் 2020ல் மத்திய அரசு வர்த்தகம் இல்லாமல் முடங்கியிருக்கும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகை மற்றும் வளர்ச்சி திட்டங்கள் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக 2021ல் ரியல் எஸ்டேட் துறை சிறப்பான வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முடங்கியிருக்கும் திட்டங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications