டெல்லி: இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தங்களது உறவுகளுக்குள் பரிமாறிக் கொள்ளும் பரிசு பொருட்கள் கூட அண்மைக்காலமாக பேசு பொருளாக மாறுகின்றன. அண்மையில் நீதா அம்பானி தன்னுடைய மருமகள் ஸ்லோகா மேத்தாவுக்கு ரூ.451 கோடி ரூபாய் மதிப்புள்ள நெக்லஸை பரிசாக அளித்தார். இப்படி பெரும் பணக்காரர்களால் வழங்கப்பட்டு பரவலாக பேசு பொருளாக மாறிய பரிசு பொருட்களின் விவரங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி, தன்னுடைய மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தாவுக்கு ரூ.451 கோடி மதிப்புள்ள நெக்லஸை பரிசாக வழங்கினார். இந்த நெக்லஸில் 407.48 கேரட் மஞ்சள் வைரமும், 18 கேரட் ரோஸ் கோல்ட் நிறைந்த ஒரு டாலரும் இடம் பெற்றிருக்கிறது. மொத்தம் 91 வைரக் கற்கள் இந்த நெக்லஸில் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி தன்னுடைய நான்கு மாதங்களே ஆன பேரக்குழந்தைக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை பரிசாக வழங்கினார். நாராயணமூர்த்தியின் நான்கு மாத பேரக் குழந்தையான எககரா ரோகன் மூர்த்திக்கு அவர் ரூ. 240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவன பங்குகளை பரிசாக வழங்கினார். தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் எககரா ரோகன் மூர்த்தி சுமார் 15 லட்சம் ஈக்விட்டி பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார். நிறுவனத்தின் மொத்த பங்குகளில் இது 0.04 சதவீதம் ஆகும்.
இந்திய பணக்காரர்களில் மிகவும் கவனிக்க தகுந்த சிவ நாடார் ரூ.115 கோடி மதிப்புள்ள கட்டடத்தை தன்னுடைய மகளுக்கு பரிசாக வழங்கினார் . ஹெச்சிஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சிவ நாடார் தன்னுடைய மகள் ரோஷினி நாடார் மல்கோத்ராவுக்கு டெல்லியின் ப்ரெண்ட்ஸ் காலனி பகுதியில் உள்ள ரூ.115 கோடி மதிப்புள்ள கட்டடத்தை எழுதி வைத்தார். டெல்லியில் மிகப்பெரிய அளவில் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் நடைபெற்ற ஒரு கட்டிடமாக இது கருதப்படுகிறது.
அடர் பூனாவாலா தன்னுடைய மகன் சைரஸ் பூனாவாலாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த காரினை பரிசாக வழங்கினார். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் வகையிலான காரை பேட்மேன் கதாபாத்திரம் பயன்படுத்திய காரை போல மாற்றி பரிசளித்தார். இவ்வாறு இதனை மாற்றுவதற்கு ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
முகேஷ் அம்பானியின் சம்பந்தியான அஜய் பிராமல் தன்னுடைய மகன் ஆனந்த் பிராமல் மற்றும் மருமகள் ஈஷா அம்பானிக்கு ரூ. 450 கோடி மதிப்புள்ள பங்களாவை திருமணத்தின்போது பரிசாக வழங்கினார். 2012 ஆம் ஆண்டு இந்த பங்களாவை அஜய் ராமல் சொந்தமாக வாங்கினார்.
அதற்கு முன் அது இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருந்தது. திருமணத்தின் போது மகன் மற்றும் மருமகள் பெயரில் அஜய் பிராமல் இந்த பங்களாவை எழுதி வைத்தார். தற்போது வைர வடிவிலான இந்த பங்களாவில் தான் ஆனந்த் பிராமல் மற்றும் ஈஷா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications