டெல்லி: மன்மோகன் சிங் தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார பார்வைகளை மிக வலுவான வார்த்தைகளை பயன்படுத்தி வெளியிடும் வல்லமை கொண்டவர். தான் கூற வந்ததை வளவள என பேசாமல் நச்சென வெளிப்படுத்துபவர். அந்த வகையில் அவர் வெளியிட்ட 5 சக்தி வாய்ந்த அறிக்கைகள் மக்கள் மத்தியிலும், முதலீட்டு சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்றபடுத்தியது.
1991, ஜூலை 24 "இந்தியா விழித்தெழுந்துவிட்டது": மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் 1991 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நிதி அமைச்சராக தன்னுடைய முதல் உரையாற்றினார். இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அறிவிக்கும் முன், பிரபல பிரெஞ்சு எழுத்தாளரும் அரசியல்வாதியுமான விக்டர் யுகோவின் உரையை மேற்கோள் காட்டி பேசினார்.

"நாம் மேற்கொள்ள இருக்கும் நீண்ட மற்றும் கடினமான பயணத்தில் சிரமங்கள் இருக்கும் அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் விக்டர் ஹியூகோ ஒரு முறை கூறியுள்ளார், நேரம் வந்துவிட்ட ஒரு யோசனையை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுப்பது தான் அத்தகைய யோசனை. இந்தியா இப்போது விழித்தெளிந்துள்ளது நாம் வெற்றி பெறுவோம் முழு உலகமும் இதை உரக்க கேட்கட்டும்"
2021 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை கொண்டுவரப்பட்டதன் 30 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் பேசிய மன்மோகன் சிங் ராபர்ட் ப்ராஸ்டின் பாடலை குறிப்பிட்டு "நான் உறங்குவதற்கு முன் நான் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் நான் செல்ல வேண்டிய மைல்களும் இன்னும் இருக்கின்றன" என்பதை குறிப்பிட்டார்.
1999,ஆகஸ்ட் 25 "எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது": 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிபிசிக்கு பேட்டி அளித்த மன்மோகன் சிங் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் பேச்சை குறிப்பிட்டார். அதாவது இந்தியாவில் நமக்கு புதிய வகையான அரசியல் தேவை, வெளிப்படையான அரசியல் தேவை, மக்களுக்கு விஷயங்களை நேர்மையாக சொல்லும் அரசியல் தேவை என நான் நம்புகிறேன்.
ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் கூறினார் "நீங்கள் சிலரை எப்போதும் ஏமாற்றலாம் ,சிலரை சில நேரம் ஏமாற்றலாம் ,ஆனால் எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது ". கடந்த 50 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் நம் மக்களை நம்ப வைத்து வருகின்றனர். அரசியல்வாதிகள் சொல்வதற்கும் வாக்குறுதி அளிப்பதற்கும் அவர்கள் செய்வதற்கும் இடையிலே பெரிய இடைவெளி இருக்கிறது அது வளர்ந்து கொண்டே போனால் பெரிய ஆபத்து ஏற்படும் என தெரிவித்தார்.
2014 ஜனவரி 1 "வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும்": பிரதமர் பதவியில் இருந்து கடைசியாக செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங் அத்தனை காலம் தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த பேட்டியில் பதில் அளித்தார்."
நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என நான் நம்பவில்லை, சமகால ஊடகங்களை விட நாடாளுமன்றத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகளை விட வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என நான் நேர்மையாக நம்புகிறேன். சூழ்நிலைகளுக்கு ஏற்ப என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்திருக்கிறேன். நான் என்ன செய்தேன் அல்லது நான் என்ன செய்யவில்லை என்பது குறித்து வரலாறு தீர்ப்பளிக்கும்" என தெரிவித்தார்.
2014, ஜனவரி 3 மோடி பிரதமாரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: மக்களவை தேர்தலுக்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங் நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்ததை குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு நரேந்திர மோடியை பிரதமராகக் கொண்டிருப்பது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என நான் உண்மையாக நம்புகிறேன் என்றார்.
பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பேசிய மன்மோகன் சிங் பிரதமர் மோடி ஒரு பேரழிவாக இருப்பார் என நான் கூறினேன், நான் ஒரு கடுமையான வார்த்தையை அப்போது பயன்படுத்திருக்கக் கூடாது என்பதை உணர்கிறேன் அதை நான் மீண்டும் செய்ய விரும்பவில்லை என தெரிவித்தார்.
2016 நவம்பர் 24 "பணமதிப்பிழப்பு சட்டப்பூர்வ கொள்ளை": 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. இதனை கடுமையாக விமர்சனம் செய்தவர் மன்மோகன் சிங்.
அப்போது நாடாளுமன்றத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மன்மோகன் சிங் "இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி" என்றார். இது ஒரு முறைப்படுத்தப்பட்ட கொள்ளை சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூரையாடல் என சாடினார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications