பெங்களூரு: ஸ்டார்ட் அப் தலைநகரம் தொழில்நுட்ப தலைநகரம் என பல்வேறு பெயர்களை பெற்றிருக்கிறது பெங்களூரு. அந்த வகையில் இங்கே செயல்படும் நிறுவனங்களுக்கு ஏற்ப இங்கே வந்து பணியாற்றக்கூடிய மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. எனவே பெங்களூரு நகரம் போக்குவரத்து நெரிசலின் தலைநகராகவும் மாறி வருகிறது.
இதன் காரணமாகவே பெங்களூருவின் தெற்கு பகுதியில் பணியாற்றக்கூடிய பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் ஓசூரில் வீடு எடுத்து தங்கி அங்கிருந்து தினமும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள தங்களுடைய நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.

பெங்களூரு நகரில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு வருவதை விட ஓசூரில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு பயணிப்பது என்பது நேரம் குறைவானதாகவும் பொருளாதார ரீதியாக பொருத்தமானதாகவும் இருக்கிறது.
தற்போது பெங்களூருவில் ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் எந்த பகுதிகளில் அதிகமாக வாடகை வீடு எடுத்து தங்கி உள்ளனர் என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
1.தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள பெல்லாந்தூர் என்பது புகழ்பெற்ற ஒரு ஐடி மையமாகும். பெல்லாந்தூரில் தான் லிங்குடின், அடோப் இந்தியா டெக்னாலஜி என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், எம்பஸி குரூப், சோபா லிமிடெட் என பல்வேறு நிறுவனங்களும் இந்த பகுதிகளில் அபார்ட்மெண்டுகளை கட்டி தந்துள்ளன.
இந்த பகுதியை பொருத்தவரை பெரும்பாலான ஐடி துறை பணியாளர்கள் இங்குதான் வாடகைக்கு வீடு எடுக்க விரும்புகிறார்கள். நோ புரோக்கர் தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தப் பகுதியில் சராசரியாக இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை 40 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. ஆண்டுதோறும் இங்கே வீட்டு வாடகை அளவானது 20 சதவீதம் என அதிகரிக்கிறது.
2.பெங்களூருவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஒயிட்ஃபீல்டு ,பல்வேறு ஐடி நிறுவனங்களின் மையமாக இருக்கிறது . இங்கே ஒரு சதுர அடி விலை என்பது 10,850 ரூபாய். ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டின் விலை 46 லட்சம் முதல் 87 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒயிட்ஃபீல்டு பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை 35 ,000 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் இங்கே 10% வரை வீட்டு வாடகை உயர்கிறது. இந்த பகுதியிலும் பல்வேறு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அபார்ட்மெண்ட்களை கட்டி விற்பனை செய்துள்ளன.
3.மராதாஹள்ளி,அவுட்டர் ரிங் சாலையில் அமைந்துள்ள இந்த இடம் ஒயிட் பீல்டு பகுதிக்கு அருகிலேயே இருக்கிறது. இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டின் வாடகை என்பது 32,000 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இங்கே ஆண்டுதோறும் வாடகை மதிப்பு 10 முதல் 15 சதவீதம் என அதிகரிக்கிறது.
4.எலக்ட்ரானிக் சிட்டி தெற்கு பெங்களூரில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற பகுதி.இங்கே ஆண்டுதோறும் வீட்டு வாடகை 10 லிருந்து 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இருந்தாலும் இந்த பகுதியில் குடியிருப்புகளை விட பிஜி எனப்படும் தங்குமிடங்களுக்கான தேவைதான் அதிகமாக இருக்கிறதாம். நோ புரோக்கர் தளம் குறிப்பிடும் தகவலின் படி எலக்ட்ரானிக் சிட்டியில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டின் சராசரி வாடகை 28,000 ரூபாயாக இருக்கிறது.
5.ஹென்னுர், அண்மைக்காலமாக ஐடி மக்களின் விருப்பமான பகுதியாக மாறி வருகிறது. இங்கே ஆண்டுதோறும் வீட்டு வாடகை மதிப்பு 10இல் இருந்து 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இந்த பகுதியில் இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான டிமாண்ட் தான் அதிகமாக இருக்கிறது. இங்கே இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை 32,000 ரூபாயில் தொடங்குகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications