தங்கள் கனவு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள பலர் நாடுவது வங்கி கடன்களைத் தான். அப்படி இருக்கையில் கடன் வாங்கிய அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. அது என்னவென்றால் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வட்டிச் சுமை குறைய வாய்ப்புள்ளது. எனவே தற்போது திட்டமிட்டால் எதிர்பார்த்ததை விட இன்னும் சீக்கிரமாக கடனை அடைத்து பத்திரத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியும்.
காலப்போக்கில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், பெரும் சம்பளம் குடும்பச் செலவுக்கே போதவில்லை. அப்படி இருக்கையில் ஈஎம்ஐ செலுத்தும் குடும்பங்களை நினைத்துப் பாருங்கள்.. இன்னும் சிரமம்! எனவே இந்த பதிவில் உங்கள் வீட்டுக் கடன் ஈஎம்ஐ-களைக் குறைக்க உதவும் 5 முறைகளைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம்.

திட்டமிடுதல்: வட்டி குறைவாக இருந்தால் உங்கள் தற்போதைய கடன் வழங்குனரிடமிருந்து வேறொரு கடன் வழங்குனருக்கு உங்களுடைய கடனை மாற்றியமைக்கலாம். இதை ஹோம் லோன் ட்ரான்ஸ்பர் என்று கூறுவார்கள். அதாவது ஒரு வங்கியில் விதிக்கப்படும் வட்டி விகிதத்தை விட இன்னொரு வங்கியில் குறைந்த வட்டி விகிதம் இருந்தால் அந்த வங்கிக்கு உங்கள் கடனை மாற்றலாம். இதனால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
முன்பணம் செலுத்தவும்: நிலுவையில் உள்ள தொகையைத் தொடர்ந்து ஈஎம்ஐ-களாக செலுத்தாமல் எவ்வளவு முடிகிறதோ? அந்த அளவுக்கு முன் பணமாக செலுத்தி முடிக்க முயற்சி செய்யுங்கள்! உங்களுக்கு திடீரென கிடைக்கும் போனஸ், வரி ரீஃபண்ட், சேமிப்பு போன்றவற்றை இதற்காகப் பயன்படுத்தலாம். இப்படி செய்து வந்தால் உங்களுடைய அசல் தொகை சீக்கிரமாக குறையும். இதனால் ஈஎம்ஐ செலுத்தும் போது எடுத்துக் கொள்ளப்படும் வட்டியும் குறையும். ஹெச்டிஎஃப்சி பேங்க், ICICI பேங்க் போன்ற முன்னணி பேங்குகள் ப்லோட்டிங் கடன்களுக்கு அபராதமே இல்லாமல் முன்பணம் செலுத்துவதை அனுமதிக்கின்றன.
திருப்பிச் செலுத்தும் திறன்களைப் புரிந்து கொள்ளுதல்: உங்கள் கடன் வழங்குனரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடன் காலத்தை நீட்டிக்க முயற்சி செய்யலாம். இதனால் உங்கள் மாதாந்திர ஈஎம்ஐ குறைய வாய்ப்புள்ளது. ஆனால் எந்த அளவுக்கு கடன் காலத்தை நீட்டிக்கிறீர்களோ? அந்த அளவுக்கு அதிகமாக வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஈஎம்ஐ தொகையை அதிகரித்தல்: உங்கள் நிதிநிலை மேம்படத் தொடங்கினால் கடன் காலத்தை குறைக்க முயற்சி செய்யலாம். அதற்கு உங்கள் ஈஎம்ஐ தொகையை அதிகரிக்கலாம். ஈஎம்ஐ தொகையை விட 1,000 ரூபாய் அல்லது 2,000 ரூபாய் அதிகமாக செலுத்தி வந்தாலே உங்களுடைய மொத்த வட்டி குறையும். அதோடு வருடா வருடம் ஒரு ஈஎம்ஐ தவணையை அதிகமாக செலுத்த வேண்டும். உதாரணமாக 12 மாதங்களுக்கு 12 ஈஎம்ஐ செலுத்துகிறீர்கள், இதோடு சேர்த்து ஒரு ஈஎம்ஐ தவணை அதிகமாக செலுத்தினாலும் கூட அதிக அளவிலான வட்டியை சேமிக்க முடியும்.
ஸ்டெப் அப் ஈஎம்ஐ: ஸ்டெப் அப் ஈஎம்ஐ என்பது முதலில் லோன் வாங்கிவிட்டு ஈஎம்ஐ செலுத்தும் போது குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவீர்கள். அதன் பிறகு அந்த ஈஎம்ஐ தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். இதைத்தான் ஸ்டெப் அப் ஈஎம்ஐ என்று கூறுகின்றனர். கடன் வாங்குபவர் இத்தகைய திட்டங்களை தேர்வு செய்தால் பிற்காலத்தில் சீக்கிரம் கடனை முடித்துவிட முடியும்.


Click it and Unblock the Notifications