சென்னை: நீண்ட நாட்களாக நேரம் எடுத்து வேலைக்கு விண்ணப்பித்து, நேர்முக தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதி பின்னர் நேர்காணலுக்கு சென்று படாத பாடுபட்டு இறுதியாக உங்களுடைய கனவு நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு கிடைத்துவிட்டது என்றால் அனைவருக்குமே மகிழ்ச்சி தான். சிலருக்கு அதிர்ஷ்டவசமாக ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்தும் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு பெரிய சாதனையாக தோன்றலாம். உடனே வரும் வேலை வாய்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கலாம். ஆனால் இங்குதான் நீங்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எந்த ஒரு நிறுவனத்தில் சேருவதற்கு முன்பும் உங்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்போடு தொடர்புடைய பல்வேறு காரணிகளையும் மதிப்பாய்வு செய்வது அவசியம். நல்ல சம்பளம் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வழங்கும் பிற சலுகைகளைப் பற்றியும் பார்க்க வேண்டும். உதாரணமாக, வேலை நேரம், விடுப்பு மற்றும் பிற விதிமுறைகள் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் வழங்கும் வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவன கலாச்சாரம் (Company Culture): நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கலாச்சாரம் மிகவும் முக்கியமானது. அங்கு பணிபுரியும் சூழல், மூத்தவர்களின் அணுகுமுறை, பணியாளர்களிடையே இருக்கும் ஒற்றுமை போன்றவை உங்கள் மனநிலையையும், வேலைத் திறனையும் பாதிக்கும். எனவே உங்கள் நிறுவனம் இது போன்ற கொள்கைகளை கடைப்பிடிக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
சேவை விதிமுறைகள்: வேலை வழங்குபவர் உங்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கவனமாகப் படிக்க வேண்டும். பணி நீக்க காலம், சம்பள அமைப்பு, பணி நேரம், விடுப்பு வசதிகள் போன்ற விஷயங்களையும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
வொர்க் லைஃப் பேலன்ஸ்: நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறதா.. என்பதைக் கவனிக்க வேண்டும். அதிகப்படியான வேலை தருவது, ஓய்வு நேரத்தில் தொந்தரவு செய்வது போன்றவை இருந்தால், உங்கள் மனநலன் பணியில் சேர்ந்த சில நாட்களில் பாதிக்கப்படலாம்.
தொழில் வளர்ச்சி: நீங்கள் பணிபுரிய போகும் நிறுவனத்தில் சேர்ந்தால் தொழில் வளர்ச்சி ஏற்படுமா என்பதை கவனியுங்கள். சில நிறுவனங்களில் பிரமோஷன் இல்லாமல் வெகு நாட்களாக பணி புரியும் நபர்களும் உண்டு. அவர்களுக்கு அந்த பணியில் இருப்பதால் இருப்பது போதுமானதாக இருப்பதால், அவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள். இது சில நபர்களுக்கு ஒத்துப் போகும் என்றாலும், பல பேருக்கு வளர்ச்சி இல்லாமல் பணிபுரிவதற்கு பிடிக்காது. இது போன்ற நபர்களில் நீங்களும் ஒருவர் எனில், உங்கள் நிறுவனத்தில் தொழில் வளர்ச்சி குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கற்றல் தொடருமா என்று கவனியுங்கள்: தொடர்ந்து கற்றாலே இன்றைய வேலை சூழலில் வெற்றி பெற முடியும். நிறுவனம் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுகிறதா.. மேலும் அதற்கான பயிற்சிகளை வழங்குகிறதா.. என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications