சென்னை: தமிழ்நாட்டில் தனது அரசு பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான கைடன்ஸ் தமிழ்நாடு பணியாளர்களை சந்தித்தேன் எனக் கூறியுள்ளார்.
கைடன்ஸ் தமிழ்நாடு பணியாளர்களின் சிறப்பான பணியின் காரணமாக நமது அரசு பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறி இருக்கின்றன என தெரிவித்துள்ளார். மீதமுள்ள 40 சதவீத பணிகளை நிறைவேற்றுவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு தான் அறிவுறுத்தி இருப்பதாகவும் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என கைடன்ஸ் தமிழ்நாடு பணியாளர்களுக்கு நான் இலக்கு நிர்ணயம் செய்துள்ளேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த தகவலின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அதில் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு பணிகள் நிறைவேறி இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. கைடன்ஸ் தமிழ்நாடு என்பது மாநில தொழில்துறை சேர்ந்த ஒரு பிரிவாகும்.
இவர்கள் தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்ததன் மூலம் அரசு 30 லட்சம் வேலை வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என பெருமிதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டி ஆர் பி ராஜா அடுத்த கட்டமாக 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற முதலமைச்சரின் இலக்கை நோக்கிய பயணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு வார அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
அப்போது பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். இந்த பயணத்தின் போது மைக்ரோ சிப் டெக்னாலஜி, நோக்கியா, பேபால் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


Click it and Unblock the Notifications