இந்தியாவில் பணக்காரர் மற்றும் ஏழைகள் இடையிலான இடைவெளி தீவிரமடைந்து வருவதாக நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரராகவும் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவுமே இருக்கின்றனர் கூறுகின்றனர். அதற்கான தரவுகளும் தற்போது வெளியாகியுள்ளது.
பொருளாதாரம் தனிநபர் நிதி ஆகியவை குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருபவர் ஹர்திக் ஜோசி என்ற நிதி ஆலோசகர் . பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்ததைவிட இந்தியாவில் நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர் சில தரவுகளையும் பகிர்ந்து இருக்கிறார். இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40.1% செல்வம் 1% மக்களிடம் தான் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேரிடம் மொத்த செல்வத்தில் 6.4 % செல்வம் மட்டுமே இருக்கிறது என குறிப்பிடுகிறார். அதேபோல தேசிய வருமானத்தில் 57.7% வருமானம் 10 சதவீத மக்களால் மட்டுமே பெறப்படுகிறது என்றும் தன்னுடைய தரவுகளில் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதாவது இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்களிடம் இந்தியாவில் இருக்கும் மொத்த சொத்தில் 6.4 சதவீத சொத்து மட்டுமே இருக்கிறது என்றும் குறுகிய எண்ணிக்கையிலான பணக்காரர்களே இந்தியாவின் 40 சதவீத செல்வத்தை அனுபவித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திய மக்கள் தொகையில் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் பெரிய அளவிலான சொத்துக்களையும் ஆடம்பரங்களையும் அனுபவித்து வருகிறார்கள் ஆனால் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்றாட உணவுக்கு திண்டாடுகின்றனர் என குறிப்பிடுகிறார். இது ஏன் நடக்கிறது என்று கேள்வியையும் அவர் எழுப்பி இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அமைப்பு பணக்காரர்களை பாதுகாப்பதற்கான ஒரு அமைப்பாக மட்டுமே இருக்கிறது என அவர் சாடி இருக்கிறார். இந்தியாவின் வரிக் கொள்கைகள் பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறது, சாதாரண தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இந்த நாட்டில் இல்லை எனக் சுட்டிக்காட்டி இருக்கிறார் .

பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறு தொழில்களை அழித்து வருகின்றன ,ரியல் எஸ்டேட்டும் பங்குச்சந்தையும் பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக மாற்றி வருகின்றன என கூறியுள்ளார். பெரும்பணக்காரர்கள் அரசியல் கட்சிகளுக்கு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிவிட்டு தாங்கள் தொடர்ந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்து கொள்கிறார்கள் என கூறும் அவர் இதுவே இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது என கவலை தெரிவித்துள்ளார்.
பெரும் பணக்காரர்கள் தேர்தலுக்கு நிதி வழங்குகிறார்கள் ,ஊடகங்களில் என்ன செய்தி வரவேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்கள் என குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்தியாவின் பிரச்னை வறுமை கிடையாது, சமம்மற்ற வருமான பகிர்வு என கூறியுள்ளார். இந்தியாவில் நாம் போதுமான அளவு செல்வத்தை உருவாக்குகிறோம் ஆனால் அது அனைவரிடமும் சமமாக பகிரப்படுவதில்லை என குறிப்பிட்டிருக்கிறார்.
பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் ,தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டிருக்கும் ஹர்திக் ஜோஷி, யாருடைய நலன்களுக்காக இந்த அமைப்பு செயல்படுகிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என தெரிவித்திருக்கிறார் .அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications