தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து காற்று மாசு பிரச்சினை. நாள்தோறும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. இதனால் தலைநகரில் வசிக்கும் மக்கள் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவின் தலைநகரமே மூச்சு விட முடியாமல் தவிக்கிறது என சொல்லும் அளவுக்கு அங்கு காற்று மாசு பிரச்சினை பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
காற்று மாசினை கட்டுப்படுத்தவும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்த வண்ணம் இருக்கிறது .அந்த வகையில் காற்று மாசு அதிகரித்திருப்பதால் சுமார் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே காற்று மாசு பிரச்சனையிலிருந்து மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க டெல்லி அரசு கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து இருக்கிறது .

இது தவிர கட்டிட இடிபாடுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் தற்போது தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. வழக்கமாக குளிர் காலத்தில் தான் காற்றின் தரம் மோசமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னரே நிலைமை மோசமாகிவிட்டது. காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) கிரேடட் ரெஸ்பாண்ஸ் ஆக்ஷன் பிளான் (Graded Response Action Plan (GRAP)) எனப்படும் திட்டத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த GRAPஇல் காற்றின் தர குறியீடு கொண்டு ஒவ்வொரு நிலைகளாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. கடந்த அக்டோபரிலேயே GRAP நிலை 1 மற்றும் GRAP நிலை 2க்கான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது டெல்லியின் காற்றின் தர குறியீடு மிக மோசமாகி 350க்கு மேல் என்ற நிலையிலேயே நீடிப்பதால் GRAP நிலை 4இல் கொண்டு வரப்பட வேண்டிய கட்டுப்பாடுகளை GRAP நிலை 3இலியே கொண்டு வந்துள்ளனர்.
குளிர் காலத்திற்கு முன்னதாக காற்றுத் தரம் மோசமடைந்து உள்ள நிலையில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) கிராடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) திட்டத்தை திருத்தி உள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் 50 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய முடியும் மற்ற அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் .
காற்றின் தரம் மோசமான பிரிவில் சரியும்போது இந்த புதிய மாற்றங்கள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் டெல்லி அரசு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளையும் ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குளிர்காலத்தில் காற்று மாசு இன்னும் அதிகரிக்கும் என்பதால் நிலைமை மேலும் மோச்மடையும். குறிப்பாக சுவாச பிரச்சினை கொண்டவர்கள் , குழந்தைகள் இதில் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள்.


Click it and Unblock the Notifications