பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பெரும்பாலான மக்கள் தங்களால் இயன்றவரை மெட்ரோ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் தான் பெங்களூருவில் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
பெங்களூருவின் பிரதான பகுதிகளையும் ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கக் கூடிய எலக்ட்ரானிக் சிட்டி பகுதியையும் இணைக்க கூடிய இந்த மஞ்சள் வழித்தடத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுவது , தாமதமாக ரயில்கள் இயக்கப்படுகிறது என அவ்வப்போது இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதை காண முடிகிறது.

இந்த சூழலில் புதிதாக திறக்கப்பட்ட இன்போசிஸ் பவுண்டேஷன் மெட்ரோ நிலையத்தில் பயணிகள் புதிய பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக புகார் கூறுகின்றனர். இன்போசிஸ் அறக்கட்டளை நிதி அளிக்கப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையம்தான் இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் கொன்னப்ப அக்ரஹார மெட்ரோ ரயில் நிலையம். நவீன வசதிகள் , எஸ்கலேட்டர்கள் , மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லக்கூடிய வசதிகள் என அனைத்தும் இந்த ரயில் நிலையத்தில் இருப்பதாக பாராட்டப்பட்டது.
திடீரென இந்த ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை பார்க்கிங் செய்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீரென இப்படி நோட்டீஸ் ஒட்டி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் புகார் கூறி வருகின்றனர். பயணிகள் தங்கள் வீடுகளிலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருவதற்கு பெரும்பாலும் இருசக்கர வாகனங்களை தான் பயன்படுத்துகின்றனர்.
அப்படி வரக்கூடியவர்கள் இந்த ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றால் அவர்கள் எங்கே அவற்றை நிறுத்துவது என கேள்வி எழுப்புகின்றனர். சையத் என்பவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் இவ்வளவு பெரிய மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைத்துவிட்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம் என நோட்டீஸ் ஒட்டுவதற்கு ஒட்டுகிறார்கள், இவ்வளவு பெரிய ரயில் நிலையத்தை திறந்ததற்கு எந்த பிரயோஜனமும் இல்லையே என கேள்வி எழுப்பி இருக்கிறார் .
பெங்களூர் மெட்ரோ ரயில் கழகம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். பெங்களூருவில் அண்மையில் தான் மஞ்சள் வழிதடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆர்வி சாலை தொடங்கி பொம்மசந்திரா வரை 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் தெற்கு பெங்களூர் பகுதியை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன . மொத்தம் 19 .1 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இந்த மஞ்சள் வழித்தடம் அமைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications