5ஜி ஏலம் நேற்று தொடங்கியது என்பதும் இந்த ஏலத்தில் 4 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்றைய முதல் நாள் ஏல முடிவில் 4 சுற்றுகள் முடிவடைந்ததாகவும் முதல் நாள் முடிவில் 1.45 லட்சம் கோடி வரை ஏலம் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேற்றைய ஏலம் குறித்த முழு தகவல்களையும் இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்பதை பார்ப்போம்.
5ஜி ஏலம்
இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க், ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டன.
வைப்புத்தொகை
இந்த ஏலத்திற்கான வைப்புத்தொகையை 4 நிறுவனங்களும் செலுத்தி உள்ளன என்பதும் இதன் மொத்த மதிப்பு 20 ஆயிரத்து 800 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் 16 ஆயிரம் கோடி முன்பணம் செலுத்தி உள்ளது என்பதும், ஏர்டெல் நிறுவனம் 1500 கோடியும், வோடபோன் நிறுவனம் 2,200 கோடியும் முன்பணமாக செலுத்தியுள்ளன. அதானி நிறுவனம் வெறும் ரூ.100 கோடி மட்டுமே முன்பணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோவுக்கு வாய்ப்பு
முன்பணம் செலுத்திய தொகையை வைத்து பார்க்கும்போது இந்த ஏலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு வருமானம்
5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூபாய் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆன்லைனில் ஏலம் நடைபெற்ற நிலையில் நான்கு சுற்றுகளுடன் ஏலம் முடிவடைந்தன.
முதல் நாளில் ஏலத்தொகை
நேற்று நடைபெற்ற நான்கு சுற்றுக்களின் முடிவில் 1,45,000 கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஏலம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய ஏலம்
இன்று ஐந்தாவது சுற்று முதல் எட்டாவது சுற்று வரை ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் முடிவடைந்ததும் முதலில் பெருநகரங்களுக்கு 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன்பின் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிகிறது.
5ஜி வேகம்
5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் என்பது 4ஜியை விட 10 மடங்கும், 3ஜியை விட 30 மடங்கு வேகமும் கொண்டதாக இருக்கும். 5ஜி ஸ்பெக்ட்ரம் இந்தியாவில் இயங்க ஆரம்பித்தால் நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications