புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடும் படங்கள் வைரலாகும். அப்படி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவன தலைவர்களையே புலம்ப வைத்துள்ளது.
அண்மையில் பைனான்ஸ் (Binance) எனப்படும் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் துணை நிறுவனரான சான் பெங் சாவோ உடன் இந்தியாவை சேர்ந்த பையர்செயின் (5ireChain) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதிக் ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு இருந்தார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருவரையும் தற்போது புலம்ப வைத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிளாக் செயின் நிறுவனம் தான் பையர்செயின். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பிரதிக் . இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது பைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் சான் பெங் சாவோவை சந்தித்துள்ளார்.
அப்போது ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்நிலையில் பையர்செயின் நிறுவனம் இந்த படத்தை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருந்தது. இருவரும் புன்னகையுடன் போஸ் கொடுக்கும் அந்த படம் பேசுபொருளாக மாறியது.
இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட போகின்றனவா ஏதேனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதா என பரவலாக பேச்சுகள் எழுந்தன. இதனால் பதறிப்போன சான் பெங் சாவோ இது வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எதேச்சையாக நாங்கள் சந்தித்த போது எடுத்த படம் தான் இது.
எங்களுக்கிடையே எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படவில்லை , நாங்கள் ஒரு நிகழ்வில் சந்தித்தோம் அப்பொழுது ஒரு புகைப்படத்தை எடுத்தோம், நாங்கள் இருவரும் சரியாக பேசிக்கொள்ளக்கூட இல்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் என்னுடன் எடுக்கும் புகைப்படத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என தெரிவித்துள்ள சாவோ இரு நிறுவனங்களுக்கும் இடையே எதுவும் நடக்கவில்லை நாங்கள் பேசிக்கொள்ளக்கூட இல்லை ஒரு நிகழ்ச்சியில் எடுத்த ஒரு செல்ஃபி தான் இது என பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த ரிப்ளையை தொடர்ந்து பையர்செயின் நிறுவனம் அந்த போஸ்டை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டது.
இதனை அடுத்து புதிதாக வெளியிட்டுள்ள பதிவில் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறக்கூடிய வகையில் இந்த பதிவினை நாங்கள் வெளியிடவில்லை, கிரிப்டோ துறையில் சாவோ மிகப்பெரிய நிபுணர் அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டோமே தவிர வேறு எண்ணமில்லை என கூறியுள்ளது.
இதனால் காட்டமடைந்துள்ள சாவோ, ஒரு போதும் நான் இப்படி புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமடைய எண்ணியது இல்லை, ஒருவருடன் படம் எடுத்தால் சமூக வலைதளங்களில் வெளியிடும் முன் அவரது அனுமதியை வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications