போர் பதற்றத்தின் காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணையின் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு எல்பிஜி, பெட்ரோல், டீசல் என அனைத்தின் விலையையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. ஈரான் ஹர்மோஸ் ஜலசந்தியை கிட்டத்தட்ட 3 மாத காலமாக மூடியுள்ளது. இதனால் அந்த வழியாக வரும் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்த முக்கியமான வழித்தடம் வழியாக தான் கச்சா எண்ணெய், எல்பிஜி போன்றவற்றை இறக்குமதி செய்கின்றன.
ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டருக்கு பல தட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் 21 நாட்களுக்கு ஒரு முறை முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டருக்கு தற்போது 45 நாட்கள் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயரவில்லை. கமர்சியல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. முன்பதிவுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலர் 5 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு மாறி வருகின்றனர்.
5 கிலோ சிலிண்டர்கள் தான் பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று தங்கி இருப்பவர்கள், பேச்சிலர்கள், மாணவர்கள் இப்படி பலருக்கும் உதவி வருகிறது. இந்திய ஆயில் நிறுவனங்களால் வழங்கப்படும் இந்த குட்டி சிலிண்டரை அடையாள ஆவணங்களை வழங்கி யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் தற்போது 5 கிலோ சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. 5 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ரூ.11 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி அன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யும். அந்த வகையில் இன்று கமர்சியல் சிலிண்டருக்கு அடுத்தபடியாக 5 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாதத்தில் 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் 261 ரூபாய் அதிகரித்தது, ஏப்ரல் மாதத்தில் 51 ரூபாய் அதிகரித்தது, தற்போது இந்த ஜூன் மாதத்தில் 11 ரூபாய் அதிகரித்துள்ளது.
சிலிண்டரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நகரத்திலும் சிறு சிறு மாற்றம் இருக்கலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று 5 கிலோ எக்ஸ்ட்ராலைட் சிலிண்டர் ரூ.344.50-க்கும், 5 கிலோ ND சிலிண்டர் ரீபில் ரூ.866-க்கும், 5 கிலோ ரீபிள் FTL ரூ. 880-க்கும், 5 கிலோ FTL - ND சிலிண்டர் ரூ. 1,810-க்கும் விற்பனையாகிறது.
ஏற்கனவே ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கமர்சியல் சிலிண்டர் விலை 990 ரூபாய்க்கு மேல் உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ. 3200-க்கும் மேல் விற்பனையாகி வந்தது. தற்போது மீண்டும் இந்த கமர்சியல் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இன்று 19 கிலோ எடையுள்ள கமர்சியல் சிலிண்டரின் விலை 46 ரூபாய் அதிகரித்து ரூ.3283-க்கு விற்பனையாகி வருகிறது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த மாற்றமும் இல்லை 14.2 கிலோ எடை உள்ள வீட்டு உபயோக சிலிண்டர் 928.50-க்கு விற்பனை ஆகிறது.
14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை வாங்க முடியாதவர்கள் இன்றளவும் இந்திய ஆயில் நிறுவனங்கள் வழக்கும் இந்த குட்டி சிலிண்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டரை நீங்கள் இந்திய ஆயில் கேஸ் ஏஜென்சிகள் மட்டுமின்றி அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெற்றுக்கொள்ளலாம். சிலிண்டர் தீர்ந்தவுடன் மீண்டும் அங்கேயே சென்று ரீபில் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications