நம்மில் பலர் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வேக வேகமாக பெட்ரோலை நிரப்பி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுவோம். ஆனால் இந்திய அரசின் மார்க்கெட்டிங் டிசிப்ளின் கைட்லைன்ஸின் கீழ் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களுக்கு சில அடிப்படை தேவைகளை அந்தந்த பங்குகள் இலவசமாக வழங்க வேண்டும். அப்படி வழங்கக்கூடிய விஷயங்களுக்கு பங்குகள் பணம் கேட்டால் நீங்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். பெட்ரோல் பங்குகளில் நீங்கள் உரிமையோடு கேட்கக்கூடிய 6 இலவச வசதிகள் என்னென்ன தெரியுமா?
ஃபில்டர் பேப்பர்?: நீங்கள் போடும் பெட்ரோல் மற்றும் டீசலின் தரம் எப்படி இருக்கிறது? என்பதை சோதிப்பதற்காக தான் இந்த ஃபில்டர் பேப்பர். பெட்ரோல், டீசலில் ஏதேனும் கலப்படம் இருப்பது போல தோன்றினால் உடனடியாக நீங்கள் அங்கு இருக்கும் ஊழியர்களிடம் ஃபில்டர் பேப்பரைக் கேட்கலாம். பின்பு பெட்ரோல் போடும் போது பெட்ரோலின் தரத்தை நீங்களே பரிசோதிக்கலாம். இதற்கு அவர்கள் எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. மேலும் பேப்பரை தருவதற்கு ஊழியர்கள் மறுக்கவும் கூடாது.
முதலுதவி பெட்டி: பயணத்தின் போது எதிர்பாராத விதமாக விபத்து அல்லது காயம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று முதல் உதவி பெட்டியை கேட்கலாம். எப்பொழுதும் பங்குகளில் ஃபர்ஸ்ட் எயிட் கிட் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

குடிநீர் வசதி: பெட்ரோல் பங்குகளில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதியும் வழங்கப்படுகிறது. எனவே வெயிலில் பயணம் செய்பவர்கள் தாராளமாக பெட்ரோல் பங்கிற்கு சென்று தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பங்கிலும் சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீரை வழங்குவது அந்தந்த பங்கின் கடமையாகும். இதற்கும் நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
ரெஸ்ட் ரூம் வசதி: நீண்ட தூர பயணத்தின் போது ரெஸ்ட் ரூம் பயன்படுத்துவது மிகவும் சிரமமான விஷயமாகவே இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் நீங்கள் எந்த பெட்ரோல் பங்கில் வேண்டுமானாலும் கழிப்பறையைப் பயன்படுத்தலாம். பங்குகளும் வாடிக்கையாளர்களுக்காக கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
இலவச டயர் நிரப்பும் வசதி: கிட்டத்தட்ட எல்லா பெட்ரோல் நிலையத்திலும் டயர்களில் காற்று நிரப்புவதற்கு தனி இயந்திரம் நிறுவப்பட்டிருக்கும். அதனை இயக்குவதற்கு பிரத்தியேகமாக ஒரு ஊழியரும் நியமிக்கப்பட்டிருப்பார். விதிமுறைகளின்படி நீங்கள் டயர்களை நிரப்புவதற்கு பணம் செலுத்த தேவையில்லை. இந்த வசதியும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும்.
தொலைபேசி வசதி: இன்றெல்லாம் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக உங்களுடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டால் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு சென்று தொலைபேசி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அவசர காலங்களில் தொலைபேசி வசதியை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பெட்ரோல் பங்குகளில் பிரத்தியேகமாக தொலைபேசி வசதி வழங்கப்பட்டிருக்கும்.
எப்படி புகார் அளிப்பது?: மேலே சொன்ன வசதிகளை ஏதேனும் பெட்ரோல் பங்க் வழங்க மறுத்தாலும், நீங்கள் உடனே புகாரை பதிவு செய்யலாம். இதற்காக ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் ஒரு கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் இருக்கும். அதில் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இதைத் தவிர நீங்கள் ஆன்லைனில் pgportal.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் புகாரை தெரிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications