அமெரிக்கா - ஈரான் மத்தியில் செய்யப்பட்ட 60 நாள் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் வேளையில் இரு நாடுகளிடமும் போர் நிறுத்தத்திற்கான முடிவுகள் எட்டப்படாத நிலையில் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஹார்முஸ் வழித்தடத்தில் கச்சா எண்ணெய் போக்குவரத்து சீராகாமல் தொடர்ந்து அதிகப்படியான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.
இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை சற்றும் எதிர்பாராத வகையில் 90 டாலர் வரை உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு பேரலுக்கு 60 சென்ட் வரையில் உயர்ந்து 89 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 40 சென்ட் உயர்ந்து 83 டாலராகவும் உயர்ந்துள்ளது. இரு கச்சா எண்ணெய்யும் கடந்த ஒரு வாரத்தில் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியமான காரணம் ஈரான் ராணுவம் கடந்த வார இறுதியில் அபுதாபி அரசு நிறுவனத்தின் டாங்கர் மீது தாக்கியதும், சவுதி ஆராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது தாக்கியதும் தான் முக்கிய காரணம்.
மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி கூறுகையில், அமெரிக்காவுடன் நாங்கள் நேரடியாக பேச விரும்பவில்லை, இதேவேளையில் அமெரிக்க அரசும், அமெரிக்க மக்களும் எரிபொருள் விலை உயர்வை ஏற்க துவங்கியுள்ளனர்.
இதனால் தற்போதைய பேச்சுவார்த்தை அனைத்தும் ஒமன் வாயிலாக மட்டுமே நடக்கிறது. ஈரான் உடன் நடந்த 3 வார பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அமைதி ஒப்பந்த விதிகளை பின்பற்றி அனைத்தையும் நிறைவேற்றினால் ஹார்முஸ் மீண்டும் திறக்கப்படும்.
இதேபோல் திறக்கப்பட்ட பின்பு கப்பல்கள் எந்த வழித்தடத்தில் ஹார்முஸ்க்குள் நுழைய வேண்டும், எந்த வழித்தடத்தில் வெளியேற வேண்டும் என்பதற்கான முடிவுகள் ஒமன் உடன் ஆலோசனை செய்து ஈரான் முடிவு செய்துள்ளது.
இதற்கான வரைப்படத்தையும் இரு நாடுகளும் இணைந்து வெளியிடும், ஆனால் அதற்கு அமெரிக்கா அமைதி ஒப்பந்த கண்டிஷன்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மறுபுறம் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்கா - இஸ்ரேல் துவங்கிய போரால் தற்போது நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளத்தை காலி செய்ய கூடும் அளவுக்கு பேச்சுவார்த்தைகள் காரசாரமாகியுள்ளது. இதேபோல் வளைகுடா நாடுகள் மட்டும் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பினால் டாலர் ஆதிக்கத்திற்கு வேட்டு வைக்கப்படும், இதனாலேயே டிரம்ப் மிகவும் அமைதியான நிலைப்பாட்டை கையாளுகிறார் என தெரிகிறது. டாலர் ஆதிக்கம் குறைந்தால் தற்போதைய அமெரிக்க கடன் அளவுக்களுக்கு பொருளாதாரம் திவாலாகி விடும் அபாயம் உள்ளது.
இதேபோல் கச்சா எண்ணெய் தினமும் மெல்ல மெல்ல உயர்ந்து வருவது இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் தற்போது எல் நினோ தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கூடுதலாக பணவீக்க பாதிப்பை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications

