ரம்ஜான் என்றவுடனே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது பிரியாணியும் ஈகையும்தான். பிரியாணி இப்போது மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே உருவெடுத்து விட்டது. வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் உடனே பிரியாணி செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது. உணவு உலகில் பிரியாணிதான் இப்போது ராஜா.
இதை பறைசாற்றும் விதமாக இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் புள்ளிவிவரம் ஒன்று தெரியப்படுத்துகிறது. புனிதமான ரம்ஜான் மாதத்தில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு வந்த ஆர்டர்களை அலசியது. இதில் வாடிக்கையாளர்கள் எந்த உணவை தங்களது ஃபேவரைட்டாக அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளனர் என்று அறிய முயன்றது.

இதில் இந்திய மக்கள் பிரியாணி வைத்திருக்கும் கொள்ளைப் பிரியத்தை அறிந்து கொள்ள முடிந்தது. மார்ச் 12 ஆம் தேதி தொடங்கிய ரம்ஜான் மாதம் ஏப்ரல் 8 ஆம் தேதியன்று முடிவடைந்தது. இந்த ஒரு மாதத்தில் சுமார் 60 லட்சம் பிரியாணியை வாடிக்கையாளர்கள் ஸ்விக்கியில் ஆர்டர் செய்துள்ளனர். இது வழக்கமான மாதங்களில் வரும் பிரியாணி ஆர்டரைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகம் என்று ஸ்விக்கி கூறியுள்ளது.
பிரியாணி அதிக ஆர்டர் செய்யப்பட்ட நகரங்களில் ஹைதராபாத் முதலிடம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் மட்டும் 10 லட்சம் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி தவிர ஹைதராபாத்தில் இரண்டாவதாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு ஹலீம். ஹலீமும் ஒரு ரம்ஜான் சிறப்பு உணவாகும். சுமார் 53 லட்சம் பிளேட் ஹலீம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மாலை 5.30 முதல் 7 மணிவரை வழக்கத்தைவிட 34 சதவீதம் அதிக ஆர்டர்கள் வந்துள்ளன. இதற்குக் காரணம் இந்த நேர இடைவெளி இப்தார் விருந்து நேரம் ஆகும். பிரியாணி தவிர ரம்ஜான் மாதத்தின்போது சிக்கன் பிரியாணி, சமோசா, மட்டன் ஹலீம், ஃபலூடா, கீர் ஆகியவை அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட பிற உணவுகள் என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
ரம்ஜான் மாதத்தில் நாடு முழுவதும் பாரம்பரியமான உணவு ஆர்டர்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் ஸ்விக்கி கூறியுள்ளது. ஹலீம் ஆர்டர் 1454.88 சதவீதம் அதிகரித்தது. ஃபிர்னி, மால்புவா ஆகியவை 80.97 சதவீதம் அதிகரித்தது. இது தவிர பேரீச்சம்பழம் 48.40 சதவீதம் அதிகரித்தது.
இந்த உணவுகளுடன் இப்தாரில் இனிப்புகளைப் பரிமாறுவதற்காக மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், போபால், லக்னௌ, மீரட் ஆகிய நகரங்களில் மிக அதிக அளவுக்கு இனிப்பு வகைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்கள் மிக அதிக அளவில் ஃபிர்னி, மால்புவாவை ஆர்டர் செய்துள்ளன.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications