இன்ஸ்டாமார்ட், செப்டோ போன்ற குயிக்காமர்ஸ் தளங்களும் சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி தளங்களும் லட்சக்கணக்கான மக்களுக்கு டெலிவரி வேலைகளை பெற்று தந்திருக்கின்றன. வண்டி ஓட்டத் தெரிந்தால் போதும் இந்த வேலையில் எளிமையாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை நம்மால் பெற முடியும்.
அந்த வகையில் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ,வேலைக்கு செல்பவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என ஏராளமானவர்கள் பார்ட் டைம் முறையிலும் முழு நேரமாகவும் இந்த டெலிவரி பார்ட்னர் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். மத்திய மாநில அரசுகளும் கூட இந்த டெலிவரி வேலைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றன.

இப்படி டெலிவரி பார்ட்னர் வேலை செய்பவர்களின் பின்னணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். அப்படி ஒரு 66 வயதில் டெலிவரி பார்ட்னராக வேலை செய்யும் ஒரு முதியவரின் கதை சமூக வலைத்தளங்களில் விவாதிக்க கூடிய விஷயமாக மாறி இருக்கிறது. 66 வயதான அகமதாபாத்தை சேர்ந்த தினேஷ் மஹந்த் தகோர்தாஸ் டெலிவரி பார்ட்னராக வேலை செய்கிறார்.
எல்ஐசி நிறுவனத்தில் கிளார்க்காக வேலை செய்து ஓய்வு பெற்றவர். நல்ல நிலையான லைப் செட்டில்மெண்ட் கிடைத்து தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்து செட்டில் செய்து விட்டார். இந்த ஓய்வு காலத்தை அவர் நினைத்திருந்தால் தனக்கு பிடித்தபடி தன் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அந்த பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. பிளிங்கிட்டில் டெலிவரி பார்ட்னராக வேலை செய்கிறார்.
தன்னுடைய அண்டை வீடுகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் டெலிவரி பார்ட்னராக வேலை செய்வதை பார்த்து நாம் ஏன் முயற்சி செய்து பார்க்க கூடாது என ஒருநாள் விளையாட்டாக முயற்சி செய்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுவே அவரது வேலையாகவும் மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட 10270 டெலிவரிகளை முடித்திருக்கிறார். காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாராகும் அவர் ஆறு மணிக்கு டார்க் ஸ்டோருக்கு சென்று விடுவாராம். இரவு 11.30 மணி வரை டெலிவரி பார்ட்னராக வேலை செய்வதன் மூலம் தனக்கு கிடைக்கும் வருமானத்தை அவர் தன்னுடைய சுற்றுலா பயணங்களுக்காக சேமித்து வைப்பாராம்.
புதுப்புது நகரங்கள் புது புது மாநிலங்கள் புது புது நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது தன்னுடைய ஆசை அதற்கு இந்த வேலையில் கிடைக்கும் வருமானத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார். அனுபவம் தான் சிறந்த ஆசான் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் பற்றிய இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இளைஞர்கள் பலரும் இவரை முன்னுதாரணமாக எடுக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த வயதிலும் இவர் வேலை செய்வதை பார்க்கும்போது நான் என்னுடைய வயதில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது என ஒரு நபர் கூறியிருக்கிறார். ஒரு நபர் வயது என்பது வெறும் எண் தான் என்பதை இவர் நிரூபித்து விட்டார் இவரது எனர்ஜியை பார்க்கும்போது நம் அனைவருக்குமே புது எனர்ஜி கிடைக்கிறது எனக் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications

