மும்பை: வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்ற தன்னுடைய கருத்திலிருந்து தான் மாறப்போவதில்லை என இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். Work - life balanceஇல் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிஎன்பிசி குளோபல் லீடர்ஷிப் மாநாட்டில் இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டின் முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு அவசியம் என தெரிவித்தார். நாட்டில் வலுவான பணி சார்ந்த நெறிமுறை இல்லாமல் வளர்ச்சியில் நம்மால் உலக நாடுகளுடன் போட்டியிட முடியாது என குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி நம் முயற்சியில் தான் உள்ளது என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.

தனது பணி அனுபவத்தில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். 1986ஆம் ஆண்டில் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என கொண்டு வரப்பட்ட மாற்றம் தனக்கு ஏமாற்றம் தந்ததாக கூறும் நாராயணமூர்த்தி, வாரத்துக்கு 6 நாள் வேலை அவசியம் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும். அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன், ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.
கடந்த ஆண்டு நாராயணமூர்த்தி இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அந்த கருத்தில் இருந்து மாறவில்லை என மீண்டும் ஒரு முறை கூறியுள்ளார்.
எனது வேண்டுகோள் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே, இதை நான் சொல்ல காரணம் இந்தியா எனது நாடு என அவர் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இதுதான் நடந்தது. குறிப்பிட்ட ஆண்டு காலம் அனைத்து மக்களும் கூடுதல் நேரம் வேலை செய்வதை ஜெர்மனி உறுதி செய்தது என சுட்டிக்காட்டினார்.
மிகவும் கடினமாக உழைக்கும் வகையில் நாம் மாற வேண்டும், அது நடந்தால் தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சி காண முடியும் என நாராயண மூர்த்தி இந்த நிகழ்ச்சியில் பேசினார்.
தான் காலை 6.30 மணிக்கு வேலை சென்றால் இரவு 8.40 மணிக்கு தான் வீட்டிற்கு செல்வேன் , வாரத்திற்கு 61/2 நாட்கள் நான் வேலை செய்வேன் என தன்னையே ஒரு உதாரணமாக கூறிய அவர் இதனால் என்னை நானே பெருமையாக கருதுகிறேன் என்றார். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலை இருக்க வேணுட்ம் என்ற கருத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications