இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் விதித்துள்ள காரணத்தால் நாட்டில் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் அடிப்படையான தேவைகள் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குக் கூட்டம் கூட்டமாகச் செல்ல துவங்கியுள்ளனர்.
மேலும் இந்தியாவின் முக்கியமான பெரு நகரங்களில் அதிகளவிலான கொரோனா தொற்று உருவாகி வரும் காரணத்தால் கிட்டதட்ட முழு லாக்டவுன் அளவிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குப் பின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து 6 சதவீதத்திலேயே நிலைகொண்டு இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் தடாலடியாக 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 மாத உயர்வை அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் கிட்டதட்ட 8 சதவீதத்தை அடைந்துள்ள காரணத்தால், நாடு முழுவதும் சுமார் 70 லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருவதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உயிர் காக்கும் பணிகளும், சேவைகள் மட்டுமே தற்போது பிரதானமாக விளங்குகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் வேலைவாய்ப்புகள் என்பது சற்று குறைவாகவே இருக்கும்.
இந்தச் சூழ்நிலை மே மாதமும் தொடரும் என்று CMIE அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications