கொச்சி: குவைத் வங்கியை ஏமாற்றி சுமார் ரூ.700 கோடி மோசடி செய்ததாக 1,425 மலையாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்திய காவல் துறை, வங்கி அதிகாரிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிந்த முன்னாள் செவிலியர்கள் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். அவர்கள் வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை கடன் பெற்று, பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

வங்கிக்கு கடன் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் விசாரணையில், கணிசமான எண்ணிக்கையிலான மலையாளிகள் இத்தகைய கடன் பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வங்கி அதிகாரிகள், கேரள போலீஸுடன் இணைந்து குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றவாளிகள் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாட்டில் உள்ள ஓட்டையை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குவைத் வங்கியுடன் செயல்படும் முகவர்கள் குழு இத்தகைய மாபெரும் மோசடிக்கு உதவி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்கு மண்டல IG வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார். இந்த விசாரணை முன்னேறும்போது, மோசடியின் அளவு மற்றும் மற்றவர்களின் தொடர்பு குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 700 கோடி ரூபாய் மோசடியில் ஈடுப்பட்டு உள்ள 1425 மலையாளிகளில் சுமார் 800 பேர் குவைத் சுகாதார அமைச்சகத்தின் கீழ் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் சிலர் பிரிட்டன், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு காரணமாக இடம் பெயர்ந்துள்ளது மூலம் இந்த வழக்கின் விசாரணை கூடுதலாக கடுமையாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications